’எங்களுக்குள் உள்ள பிரச்சினையை நாங்களே பேசித் தீர்த்துக்கொள்வோம். தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்திருப்பது சட்டவிரோதமான செயல்’ என்று தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் தாக்கல் செய்த அவசர  வழக்கில் மே 7ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. எந்தவித முறைகேடும் நடைபெறாத நிலையில் தனி அதிகாரியை நியமனம் செய்தது, சட்டவிரோதம் என்றும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விஷால் தரப்பில் கோரப்பட்டுள்ளது.மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், விஷால் தரப்பினர் முறையிட்டனர்.

விஷாலின்  கோரிக்கை ஏற்கப்பட்டு இன்று விசாரணை நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் தமிழக அரசுக்கு வரும் மே7ம் தேதிக்குள்  இப்பிரச்சினைக்கு விளக்கம் தரும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளித்த வக்கீல்கள் ‘சங்கத்தின் பிரச்சினையை அவர்களாகவே பேசித் தீர்த்துக்கொள்ள முன் வந்தால் தனி அதிகாரி வாபஸ் பெறப்படுவார் என தெரிவித்தனர்.