நடிகர் சங்க நில மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாரையும், ராதாரவியையும் ஏன் கைது செய்து விசாரிக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி இருப்பதால் இருவரும் ஜாமின் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 26 சென்ட் நிலத்தை அப்போது நடிகர் சங்க பொதுச் செயலாளராக பதவி வகித்த ராதாரவி, தலைவராக பதவி வகித்த சரத்குமார் மற்றும் நிர்வாகிகளான செல்வராஜ், நடேசன் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடாக விற்பனை செய்ததாக நடிகர் சங்கத்தின் தற்போதைய பொதுச் செயலாளர் நடிகர் விஷால், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த 2017-ம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், வழக்குப்பதிவு செய்யக் கோரி விஷால் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிய உத்தரவிட்டது. அதன்படி, சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோருக்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவினர், கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை எனக் கூறி, வழக்கை வேறு அமைப்பு விசாரணைக்கு மாற்றக் கோரி விஷால் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இந்த வழக்கு தொடர்பாக விரைந்து விசாரித்து மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட ராதாரவியையும் சரத்குமாரையும் ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.