சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’படத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் தடை விதித்துள்ள நிலையில்,...அந்த இலவச விளம்பரத்துக்கு நன்றி...படம் கண்டிப்பாக டிசம்பர் 20ம் தேதி வந்தே தீரும்’என்று ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார் அப்பட தயாரிப்பாளர்.

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதே தலைப்பில் தெலுங்கு நடிகர் விஜயதேவரகொண்டாவும் ஒரு படம் நடித்ததால் துவக்கத்தில் நடந்த சண்டையின் தீர்ப்பு சிவாவுக்கு சாதகமாக அமைந்தது.

இந்நிலையில் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கிய 10 கோடி கடன் தொடர்பாக டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த விவகாரத்தில் 'ஹீரோ' படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவிட்டது. இதனால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் இருக்கும் எனச் செய்திகள் வெளியாகின.சிவகார்த்திகேயன் படம் என்பதால் பலரும் இந்தச் செய்தியைப் பகிரத் தொடங்கினர். இது தொடர்பாக 'ஹீரோ' படத்தைத் தயாரித்து வரும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பதிவில், "டிவி, ரேடியோ, செய்திகள் என எங்கே திரும்பினாலும் நம்ம செய்தி தான். இந்த இலவச விளம்பரத்துக்கு நன்றி. நமக்கு ரசிகர்கள் எல்லா பக்கமும் இருக்காங்க போல. ரசிகர்களுக்கு - எவ்வித கவலையும் வேண்டாம். படம் கண்டிப்பாக டிசம்பர் 20-ம் தேதி வருது" என்று தெரிவித்துள்ளது. ‘ஹீரோ’என்ற டைட்டில் அறிவித்த நாளிலிருந்தே இப்படம் பலவித சர்ச்சைகளைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.