கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்களுடன் கடந்த 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தொற்று பீதி காரணமாக தியேட்டர்களில் பார்வையாளர்களின் வருகை கணிசமாக குறைந்தே காணப்பட்டது. தற்போது தமிழகத்தில் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதை அடுத்து திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. 

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கும் படி நடிகர் விஜய், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருந்தார். பொங்கல் விருந்தாக விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ள நிலையில், தமிழக தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனை திரையுலகினர் பலரும் வரவேற்ற போதும்,  தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 


இந்நிலையில் நேற்று கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும் தமிழகத்தில் தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை திரும்ப பெற வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. 

இதனிடையே நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரபு என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்ததற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் இன்று தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் வழக்கறிஞர் பிரபுவின் முறையீட்டை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என அறிவித்தார். எனவே இந்த வழக்கு நீதிமன்ற வரிசையின் படி விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.