’தர்பார்’ படக்குழுவிடமிருந்து தனக்கு அதிகாரபூர்வமாக எந்த அழைப்பும் வராத நிலையில் நாட்டின் மிக முக்கியமான பத்திரிகைகள் கூட நான் அப்பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டுவிட்டதாக எழுதி வருவது ஆச்சரியத்தை அளிக்கிறது என்கிறார் பிரபல மலையாள நடிகர் செம்பன் விநோத்.

மலையாளப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வரும் செம்பன் தமிழில் ஏற்கனவே ‘வாயை மூடிப் பேசவும்’,’கோலி சோடா 2’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவரையும் தர்பார் பட டிசைனில் உள்ள ரஜினியையும் இணைத்து ரசிகர் ஒருவர் உருவாக்கியிருந்த போஸ்டர் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் செம்பன் பகிர்ந்திருந்தார். அடுத்த கணம் செம்பன் தர்பாரில் முக்கிய வில்லன் வேடத்தில் கமிட் ஆனார் என்று தொடங்கி ஏகப்பட்ட செய்திகள் வலம் வரத்தொடங்கின.

அச்செய்திகளை இன்று மறுத்த செம்பன் விநோத்,’ முகநூலில் சும்மா ஒரு ஆசைக்காகத்தான் அந்த ஃபேன்மேட் போஸ்டரைப் பகிர்ந்தேன். அடுத்து நான் தர்பாரில் கமிட் ஆகிவிட்டதாக நூற்றுக்கணக்கான செய்திகள். ஆயிரக்கணக்கில் வாழ்த்துகள். இன்னும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் ரஜினியும் வாழ்த்துச் சொல்லாததுதான் பாக்கி. இப்போது அந்தப் படத்தை எனது முகநூல் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டேன். ஆனால் ‘தர்பார்’ படத்தில் நடிக்க எப்போது அழைப்பு வந்தாலும் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்’ என்கிறார் செம்பன்.