உலகப் புகழ்பெற்ற த காஃபாதர் திரைப்படத்தின் சில அம்சங்களை உருவி மணிரத்னம் செக்க சிவந்த வானம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. நாயகன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். மும்பையின் தாதாவாக இருக்கும் கமலிடம் அந்த மும்பையில் உயர் காவல்துறை அதிகாரி ஒருவரே வந்து தனது மகள் கற்பழிக்கப்பட்டதற்கு நீதி கேட்பது போல் அந்த காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த காட்சியை நாயகன் படத்தில் கமலின் கேரக்டர் எவ்வளவு பவர் ஃபுல்லானது என்பதை காட்டுவதற்காக மணிரத்னம் வைத்திருப்பார். 

அதாவது மும்பையில் உயர் காவல் துறை அதிகாரியா லேயே முடியாததை வரதராஜ முதலியாராக நடித்த கமலால் செய்ய முடியும் என்பது தான் இந்த காட்சியின் சாராம்சம். ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த காட்சி உலகப் புகழ் பெற்ற த காட்ஃபாதர் திரைப்படத்தின் முதல் காட்சி என்பது அப்போது பலருக்கு தெரியாது. இப்படியாக காட்சிகளை திருடுகிறார் என்று மணிரத்னம் மீது அப்போதே புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி த காட்ஃபாதர் படத்தை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

அமெரிக்காவின் மிகப்பெரிய மாஃபியா டானாக மார்லான் பிராண்டோ நடித்திருப்பார். அவருக்கு மூன்று மகன்கள். முதல் மகன் தந்தைக்கு உதவியாக இருப்பான். 2வது மகன் தந்தையுடன் இருப்பான். ஆனால் அவன் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவன். 3வது மகன் ராணுவ வீரன். இவர்களில் முதல் மகன் தந்தைக்கு பிறகு அவரது இடத்தை அடைய வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பான். ஆனால் நிகழ்கிற சம்பவங்கள் ராணுவ வீரரான கடைக்குட்டி அல்பசீனோவை மார்லன் பிராண்டன் இடத்திற்கு கொண்டு வந்து வைத்திவிடும்.

இந்த கதையை நினைவுபடுத்தும் வகையில் தான் செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் காட்சிகள் இருக்கின்றன. அதாவது பிரகாஷ் ராஜை ஒரு மிகப்பெரிய டானாக காட்டுகிறார்கள். அவரது மூத்த மகனாக வரதன் என்கிற கேரக்டரில் அரவிந்த் சாமியை காட்டுகிறார்கள். காட்ஃபாதர் படத்தில் உள்ளதை போன்றே மூத்த மகனான அரவிந்த் சாமி தனது தந்தையின் இடத்திற்கு ஆசைப்படுகிறார். அடுத்த மகனாக தியாகு எனும் கேரக்டரில் அருண் விஜயை மணிரத்னம் காட்டுகிறார். இவருக்கோ தனது அண்ணன் அரவிந்த் சாமியின் இடம் மீது ஆசை. காட்ஃபாதர் படத்திலும் கூட மார்லன் பிராண்டனின் 2வது மகன் கேரக்டரில் நடித்தவர் இப்படியான மனநிலையில் தான் இருப்பார். 3வது மகன் கடைக்குட்டியாக சிம்பு நடித்துள்ளார். இவர் தந்தையின் தாதாயிஷங்க்ள் வேண்டாம் என்று வெளிநாட்டில் இருப்பவர். ஆனால் காலச் சூழலில் அவரும் தாதாயிசத்திற்கு வருவது போன்ற காட்சிகள் இருக்கின்றன.

காட்ஃபாதர் படத்திலும் கூட ராணுவ வீரனாக அமைதியான வாழ்வை விரும்பும் அல்பசீனோ வேறு வழியே இல்லாமல் தனது தந்தை விட்டுச் சென்ற குற்றச்செயல்களை தொடர வேண்டிய நிலை உருவாகும். இப்படியாக காட்ஃபாதர் படத்தின் காட்சிகளை வைத்து செக்க சிவந்த வானத்தை மணிரத்னம் உருவாக்கியிருந்தாலும் விஜய் சேதுபதியின் ரசூல் கதாபாத்திரம் மட்டுமே அந்த படத்தில் இருந்து வேறுபடுகிறது. எனவே காட்ஃபாதர் காட்சிகளை உருகி, புதிய மசாலா வழங்கி மணிரத்னம் இந்த படத்தை உருவாக்கியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது என்கின்றனர் ரசிகர்கள்.