நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் நெருங்கிய நண்பர் என்ற பெயரில் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக நூற்றுக்கணக்கானவர்களிடம் கோடிக்கணக்கில்  மோசடி செய்தவர் அம்பலத்துக்கு வந்துள்ளார். இவர் வேலைக்கு அனுப்பியது இந்தியாவை விட 20 வருடங்கள் பின்தங்கியுள்ள ஆர்மேனிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை சரபோஜி நகரில் ருஸ்கின் கல்வி அறக்கட்டளை நடத்தி வருபவர் பிரபு. இவர் லண்டனில் வியாபார கல்வியியல் கல்லூரி நடத்துவதாக முகநூல் மற்றும் யூடியூப்பில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். இவரது கல்லூரி லோகோவை நடிகர் சிம்புவை வைத்து வெளியிட்டதாக காட்டிக்கொள்ளும் பிரபு, தன்னை ஒரு சர்வதேச தொழில் அதிபர் போல காட்டிக் கொண்டதாக கூறப்படுகின்றது. அதே போல் இசையமைப்பாளர் அனிருத்தைக் கட்டிப்பிடித்துக்கொஞ்சுவதுபோலவும் முகநூலில் படங்கள் வெளியிட்டுள்ளார்.

தனது வசூல் மோசடிக்கு முகநூலை அதிகம் பயன்படுத்திவந்த பிரபு ,நடிகர் சிம்புவை காரில் இருந்து இறக்கி லண்டனில் உள்ள ஓட்டலின் மேல் மாடிக்கு அழைத்து சென்ற போது உடன் செல்வது, அனிருத்தைக்கட்டிப்பிடிப்பது போன்ற படங்களை வெளியிட்டதால் இளைஞர்கள் இவர் ஒரு பெரிய வி.ஐ.பி என்று நம்பி ஏமாந்தனர். ஆனால் அங்கு நடக்கின்ற நிகழ்ச்சியில் முக்கியமான நபர் போல இல்லாமல் ஓரத்தில் நின்றுள்ள நிலையில், தனது கல்லூரி லோகோவை சிம்பு வெளியிட்டதாக கூறி அந்த வீடியோ காட்சியை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இவரது மோசடி முற்றிலுமாக அம்பலத்துக்கு வந்துள்ளது.  துபாய்க்கு  வேலைக்குப்போய் ஒட்டகம் மேய்க்க வேண்டிய சூழலுக்கு இணையாக இவர் தன்னிடம் சிக்கும் இளைஞர்களை அனுப்பும் ஆர்மேனிய நாடு மிகவும் ஏழ்மையான, அதாவது இந்தியாவை விட 20 வருடங்கள் பின் தங்கிய நாடு. இன்னும் எளிமையாக சொல்வதெனில் இங்கு 6 ரூபாய் சம்பாதித்தால் அது இந்திய மதிப்புக்கு ஒரு ரூபாய்தான்.