சமீபத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து கடவுள்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சர்ச்சையானது. இதை முன்வைத்து காயத்ரி ரகுராம் திருமாவளவனை தரக்குறைவாக விமர்சித்தார். திருமாவளவனை விமர்சித்து அவர் ட்விட்டரில் போட்ட சில பதிவுகள், அவதூறு கிளப்பும் வகையில் இருந்தன. இதனால், அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. 

இந்நிலையில், திருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் புதிதாக ஒரு சவால் விடுத்துள்ளார். அதில், “இந்து மதம் பற்றியும், இந்து கடவுகள் பற்றியும் நீங்கள் தொடர்ச்சியாக இழிவாக பேசினீர்கள். அதனால்தான் நானும் உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துகளைக் கூறினேன். நீங்கள் கூறியதற்கு மன்னிப்பு கூறியுள்ளீர்கள். நானும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

உங்களுக்கு ஒரேயொரு வேண்டுகோள்தான் விடுக்கிறேன். இனி மேலும் இந்து மதம் பற்றியும் இந்து கோயில்கள் பற்றியும் எங்கேயும் எப்போதும் தரக்குறைவாக பேசாதீர்கள். நீங்கள் மேடைகளில், பொதுக் கூட்டங்களில் பேசுவதை நாடாளுமன்றத்துக்கு உள்ளே சென்று பேச முடியுமா? அதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?”என்று கேள்வியெழுப்பியுள்ளார். 

முன்னதாக காயத்ரி ரகுராம், “திருமாவளவன் போன்ற ஆட்களை அடக்குவதற்கு அய்யா மருத்துவர். ராமதாஸ்தான் சரியான ஆள்,” எனப் பதிவிட்டது சர்ச்சையை மேலும் பெரிதாக்கியது.

இது குறித்து திருமா, “என்னைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் அரசியல் களத்தில் எதிர்க்க வேண்டியது மோடி போன்ற பெரிய சக்திகளைத்தான். சிலர் அரசியல் உள்நோக்கம் கொண்டு நம்மை விமர்சிக்கிறார்கள். அந்த மாதிரியான பதறுகளுக்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நான் ஆற்றிய மொத்த உரையைக் கேட்காமல், நான் சொன்ன 10 நொடிக் கருத்தை வெட்டி, மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டி என் மீது வெறுப்புணர்வைத் தூண்ட முயற்சி நடந்து வருகிறது. அதற்கு செவி மடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்,” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.