கொரோனா பிரச்சனையால்  திரைத்துறை கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. திறக்கபடாத தியேட்டர்கள், முழுவதுமாக முடிந்த பிறகும் திரைக்கு வர முடியாத திரைப்படங்கள், பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படப்பிடிப்பு என பல பிரச்சனைகள் சுழட்டி அடிக்கிறது. கடந்த  6 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், அதனை நம்பி பிழைத்து வந்த 10 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் கடும் பசி, பட்டினியால் வாடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை கடிதம் எழுத்தப்பட்டது. 

கடந்த மார்ச் மாதம் முதல் மிட்ட தட்ட 5 மாதத்திற்கு மேலாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் உள்ளதால், பொன்மகள் வந்தாள், பெண் குயின் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானது. மேலும்  பல படங்கள் ஆன்லைனில் வெளியாக உள்ள நிலையில், தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஆன்லைன் தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தியேட்டர் உரிமையாளர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக மாறிவிடும் என பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இருப்பினும் இந்த மத்திய, மாநில அரசுகள் அறிவித்த தளர்வுகளில் தியேட்டர்கள் திறப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் இடம் பெறவில்லை. 

இந்நிலையில் நாடு முழுவதும் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை அடுத்து தற்போது நாடு முழுவதும் எப்போது திரையரங்குகளை திறப்பது என்பது குறித்து வரும் 8ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை செய்ய உள்ளதாக தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்திருந்தார். அதன்படி இன்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் காணொலி மூலமாக கருத்து கேட்கும் கூட்டத்தை நடத்தியது. 

 

இதையும் படிங்க: போதைக்கு அடிமையாகிட்டேனா?... உண்மையை போட்டுடைத்த சூப்பர் சிங்கர் பிரகதி...!

25 சதவீத சீட்களை மட்டுமே நிரப்ப வேண்டும், ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை, ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்குமான இடைவெளி என பல கட்டுப்பாடுகள் மத்திய அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் தியேட்டர் உரிமையாளர்களும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி, ஜி.எஸ்.டி. ரத்து உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்களாம். மேலும் இந்த கூட்டத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.