எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டி வந்த நடிகர் மாரிமுத்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாராலும் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத இவருடைய இழப்புக்கு, பிரபலங்கள் அடுத்தடுத்து கண்ணீர் மல்க தங்களுடைய இரங்கல்களை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் துணை இயக்குனராக வசந்த், எஸ்.ஜே சூர்யா, போன்றவர்களிடம் பணியாற்றிய மாரிமுத்து, பின்னர் 'கண்ணும் கண்ணும்' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாத நிலையில், இந்த படத்தை தொடர்ந்து விமல் - பிரசன்னா ஆகியோரை வைத்து 'புலிவால்' என்கிற படத்தையும் இயக்கினார். இந்த படமும் வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை. பின்னர் திரைப்பட இயக்கத்தில் இருந்து விலகி, தமிழ் சினிமாவில் நடிகராக கால் பதித்தார்.
இயக்குனர் மிஷ்கின் வற்புறுத்தல் காரணமாக அவர் இயக்கிய 'யுத்தம் செய்' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடிக்க, இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டதாக மாறியது. இதைத்தொடர்ந்து பரியேறும் பெருமாள், முதல் சமீபத்தில் வெளியாகி 600 கோடி வரை வசூலில் சாதனை படைத்த ஜெயிலர் வரை இவரின் நடிப்பு பயணம் தொடர்ந்து நீண்டுகொண்டே உள்ளது.

குறிப்பாக இவர் நடித்துவரும் எதிர்நீச்சல் சீரியலில் இவரின் நடிப்புக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அதே போல் ஒவ்வொரு வாரமும் 'எதிர்நீச்சல்' தொடர் டிஆர்பி-யில் சக்க போடு போட்டு வருகிறது. இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் மீம்ஸ் கிரியேட்டருக்கு தீனி போடுவது போல் அமைந்துள்ளன. குறிப்பாக ஏய் இந்த மா என்கிற டயலாக் வேற லெவலுக்கு ரீச் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை எதிர்நீச்சல் சீரியலில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரின் மரணத்தை தொடர்ந்து, நடிகை ராதிகா முதல் பல பிரபலங்கள் அடுத்தடுத்து சமூக வலைதளத்தில் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் சாந்தனு... இதை கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது, இதயம் நொறுங்கி விட்டது. அவருடைய பல பணிகளை தொடர்ந்து பின்பற்றி வந்தார். ஆழ்ந்த இரங்கல் மாரிமுத்து அவர்களுக்கு, அவரின் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள் என கூறியுள்ளார்.
நடிகை ராதிகா "மாரிமுத்துவின் மறைவைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். ஒரு திறமைசாலி அவருடன் பணிபுரிந்துள்ளேன். அவ்வளவு சீக்கிரம் போய்விட்டார். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்".
தனஜெயன் கூறுகையில் "இது நம்ப முடியாத செய்தி. அவ்வளவு அதிர்ச்சி. RIPமாரிமுத்து சார், நீங்கள் ஒரு சிறந்த நடிகர் & இயக்குனர்". என தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரசன்னா... "இயக்குனர் மாரிமுத்துவின் மறைவு அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். கண்ணும்கண்ணும் மற்றும் புலிவால் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்களுக்குள் சகோதரர்கள் போன்ற பந்தம் இருந்தது. பலவற்றில் கருத்து வேறுபாடுகளை ஒப்புக்கொண்டோம். அவரது வாழ்க்கை எளிதானது அல்ல. ஒரு நடிகராக அவர் இறுதியாக நன்றாக இருந்தார். அவர் இன்னும் சிறிது நேரம் அங்கேயே இருந்தார். ஆனால் அவரின் இழப்பு ஏற்றுக்கொள்ளமுடியாதது என கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து... வழக்கம் போல் தன்னுடைய கவிதையால், மாரிமுத்துவின் மரணத்திற்கு இரங்கல் கூறியுள்ளார்.
