நாடக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ’திரௌபதி’படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 28 என இந்த படத்தின் இயக்குனர் ஜி.மோகன் அறிவித்துள்ள நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வரும் ஒருசில அரசியல் அமைப்புகள் தற்போது மேலும் சுறுசுறுப்பாகி வருகின்றன.
 
திரெளபதி படத்தின் சில கேரக்டர்கள் மற்றும் சில காட்சிகள் சர்ச்சைக்குரியதாக இருப்பதாகவும், நாடக காதல் குறித்த காட்சிகள் ஒருசில அரசியல் கட்சி தலைவர்களை நேரடியாக தாக்குவதாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி வரும் ஒருசிலர் இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால் இன்னும் ஒருசில அமைப்புகள் இந்த படம் ரிலீஸாகியே தீரவேண்டும் என்று கூறியதோடு இந்த படத்திற்கு ஆதரவாக போஸ்டர்களும் அடித்துள்ளன. இந்த நிலையில் திரௌபதி திரைப்படம் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகும் என இயக்குனர் ஜி.மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அவர், திரெளபதி குறிப்பிட்ட சாதிக்கு எதிரானது அல்ல.  படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ள அதிகாரிகள்  திரைப்படத்தை வெளியிட அனுமதித்துள்ளனர்.  இதையடுத்து வரும் 28ம் தேதி 300 இடங்களில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளோம்.  14 இடங்களில் திரைப்படத் தணிக்கை குழு கட் செய்துள்ளது. சென்னை சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக நடந்த நாடகக் காதல் திருமணங்கள் குறித்து இந்தப்படம் பேசும்’’ எனத் தெரிவித்துள்ளார்.