கடந்த சில நாட்களாகவே நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரியில் மீன்பிடித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. சில சமயங்களில் சாமானியர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாத அளவிற்கு சிக்கித் தவித்து வரும் நிலையில், நடிகர்கள் இ-பாஸ் பெறாமல் ஜாலியாக வெளியில் சுத்தி வருவது சகஜமான  காரியமாக மாறிவிட்டது. அப்படி கடந்த 17ம் தேதி நடிகர்கள் விமல், சூரி ஆகியோருடன் இரண்டு இயக்குநர்கள் உட்பட சிலர் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் தடைமீறி சுற்றித்திரிந்தது சர்ச்சையை கிளப்பியது. 


எவ்வித அனுமதியும் இன்றி ஏரிக்கு அருகேயுள்ள விடுதியில் தங்கியிருந்த நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்டோர் தடையை மீறி ஏரியில் மீன்பிடித்ததாக மகேந்திரன் என்பவர் கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  இதையடுத்து நடந்த விசாரணையில் சூரி, விமல் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறை சரக கண்காணிப்பாளர் தேஜஸ்வி, தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் இனி அத்துமீறி நுழைய கூடாது என நடிகர்கள் இருவருக்கும்  எச்சரிக்கை விடுத்தது தெரியவந்தது. விமல், சூரி அத்துமீறி நுழைந்தது குறித்தும் வனத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து நடிகர்கள் சூரி, விமலுக்கு உதவியதாக வேட்டை தடுப்பு காவலர்கள் மூன்று பேரை வனத்துறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  நடிகர்கள் முறையாக இ பாஸ் பெற்று தான் வந்தனரா என்பது குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.இந்நிலையில் இ-பாஸ் பெறாமல்  நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் கொடைக்கானல் வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், தொற்று நோய் பரவும் சட்டம் ஆகியவற்றை மீறி வந்துள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கொடைக்கானல் காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்ய கோட்டாட்சியர் சிவக்குமார் பரிந்துரைத்திருந்தார். அதன் படி நடிகர்கள் விமல் மற்றும் சூரி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.