தமிழ் சினிமாவின் தரமான ஆளுமைகளில் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் இயக்குநர் ராம். கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி மற்றும் பேரன்பு ஆகிய வீரியமான படைப்புகளின் மூலம் தனது இருப்பை மிக அநாயசமாக நிரூபித்த படைப்பாளி. இவரது தங்கமீன்கள் படம் ஓரளவும், பேரன்பு  படம் மிக விரிவாகவும் ‘சிறப்பு’ குழந்தைகள் எனப்படும் நார்மல் தன்மை இல்லாத குழந்தைகளின் பிரச்னைகளைப் பற்றி பேசியிருந்தன. 

இதற்காக தேசிய விருதே வாங்கிக் குவித்த இயக்குநர் இவர். தென் இந்திய சினிமாவின் மிக பெரிய ஆளுமையான நடிகர் மம்மூட்டி, ராமினை அவரது திறமைக்காக கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அந்த ராம், சமீபத்தில் கோயமுத்தூரில் நடந்த, சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்ட ஒரு ‘ஸ்பெஷல் வாக்கத்தான்’ எனும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு தனது பெரிய சைஸ் காரான இன்னோவாவில் சென்றிருக்கிறார் ராம். அவரது காரை நுழைவாயிலிலேயே தடுத்த தலைமை காவலர் “சார் காரை உள்ளே கொண்டு போகாதீங்க. இடமில்ல. ஸ்பெஷல் குழந்தைங்க நடக்க இருக்கிறாங்க.” என்றாராம். ஆனால் ராம் அதை கேட்காமல் காரை உள்ளே நுழைத்திருக்கிறார். 

இதற்குள் இன்னொரு நபர் அங்கே ஓடிவந்து ‘சார் இது ஸ்பெஷல் குழந்தைங்க நடக்க இருக்கிற ரோடு. ப்ளீஸ் வெளியில நிறுத்துங்க.” என்றாராம். அப்போதும் ராம் கேட்காமல், தன் காரின் வசதியான பார்க்கிங்குக்கு இடம் தேடி இருக்கிறார். இந்த நேரத்தில் அவரது காரைப் பின் தொடர்ந்து இன்னும் சில கார்களும் ஸ்டேடியத்தினுள் நுழைய முயன்றிருக்கின்றன. உடனே தலைமை காவலருக்கு கடும் கோபம் வந்து, “சொல்ல சொல்ல கேக்காம உள்ளே வந்து, இவ்வளவு பெரிய காரை நிறுத்த அடம் பிடிச்சா எப்படி?” என்று டென்ஷனாகியிருக்கிறார். 

ஆனால் அப்பவும் ராம், ஸ்டேடியத்தின் சுற்றுச்சாலையில் ஒரு இடத்தை காட்டி அங்கே நிறுத்திக்கவா? என கேட்டு அடம் பிடித்தாராம். ‘சார் அதெல்லாம் சின்ன கார். உங்க கார் பெருசு. நீங்க நிறுத்தினால் அது பாதையை அடைக்கும்.’ என்று கிட்டத்தட்ட கதறியிருக்கின்றனர். ஆனால் அப்போதும் விடாத ராம், அந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த கோ ஆர்டினேட்டரை போனில் அழைத்து வர வைத்து, தன் காருக்கு நல்ல இடம் பார்த்து தரச்சொல்லி நிறுத்திவிட்டே நிம்மதியாக இறங்கியிருக்கிறார். 

வெறும் காரை பார்க் பண்ணுவதர்காக ராம் செய்த இந்த கூத்துகள் பிரபல வார பத்திரிக்கை ஒன்றில் லைவ்வாக பதிவு செய்யப்பட்டுவிட்டது. 
இப்போது ‘ ஸ்பெஷல் குழந்தைகளின் வாழ்க்கை போராட்டத்தை சினிமாவில் சொல்லி, ஸ்பெஷல் கவனமி ஈர்த்தார் ராம். ஆனால் இயல்பு வாழ்க்கையில் அதே ஸ்பெஷல்  குழந்தைகள் நடக்கின்ற பாதையில்தான் காரை நிறுத்துவேன் என அடம் பிடித்து, தன் பெயரை தானே கெடுத்துக் கொண்டிருக்கிறார்! ஆக தங்கமீன்கள் இப்படி தகரமீன்களாயிடுச்சே!’ என்று விமர்சனங்கள் வெளுக்கின்றனர். 
ஆனந்த யாழிசையை இப்படியா அபஸ்வரமா மீட்டணும்!