கேரளத்தைச் சேர்ந்தவரும், பிரபல வில்லன் நடிகருமான கேப்டன் ராஜு உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 68.

முன்னாள் ராணுவ வீரரான கேப்டன் ராஜு கடந்த 1950-ம் ஆண்டு பத்திணம்திட்டா மாவட்டம் ஓமலூரில் ஜூன 27-ம் தேதி பிறந்தார். இவரின் பெற்றோர்கள் ஆசிரியர்கள். ஓமலூரில் பள்ளிப்படிப்பை முடித்த ராஜு பத்திணம்திட்டாவில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் பிரிவில் பட்டம் பெற்றார். அதன்பின் தனது 21-வயதில ராணுவத்தில் சேர்ந்து, கேப்டனாக பதவி உயர்வுபெறும் வரை பணியில் இருந்தார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றபின் ஒரு தனியார் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றிய ராஜு, அதன்பின் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இதுவரை மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் ராஜு நடித்துள்ளார். தொலைக்காட்சி  தொடர்களிலும் ராஜு நடத்துள்ளார். மோகன்லாலுடன் இணைந்து ராஜு நடித்த நாடோடிகட்டு இவருக்கு சிறப்பான பெயரை பெற்றக் கொடுத்தது. கடைசியாக 2017-ம் ஆண்டு மாஸ்டர்பீஸ் எனும் திரைப்படத்தில் ராஜு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு சென்றார். அப்போது திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதையடுத்து, விமானம் அவசரமாக ஓமன், மஸ்கட் நகரில் தரையிறக்கப்பட்டது. அதன்பின் ராஜுவின் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று மஸ்கட்டில் இருந்து ராஜு கொச்சிநகருக்கு விமானத்தில் அழைத்துவரப்பட்டு அங்கு தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலையும் சீராக இருந்து வந்தது.

இந்நிலையில் திடீரென இன்று காலை ராஜு உயிரிழந்துவிட்டதாக அவரின் குடும்பத்தினர்  தெரிவிக்கின்றனர். ராஜுவுக்கு பிரமிளா என்ற மனைவியும், ரவி என்ற மகனும்உள்ளனர்.

தமிழில் நல்ல நாள், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஜல்லிக்கட்டு, உள்ளம் கவர்ந்த கள்வன், தர்மத்தின் தலைவன், என் ஜுவன் பாடுது, சூர சம்ஹாரம், ஜீவா, சின்னப்பதாஸ், என் அத்தைமக ரத்தினமே, தாய்நாடு, நாங்கள்,சேவகன், உள்ளே வெளியே, பிரியங்கா, ராஜகுமாரன், வேலுச்சாமி, நினைத்து நினைத்துப் பார்த்தேன் ஆகிய திரைப்படங்களில் ராஜு நடித்துள்ளார்.