கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் சேர்ந்து ‘தூங்காவனம்’படத்தைத் தயாரித்த கோகுலம் ஃபிலிம்ஸ் கோபாலனின் மகன் பைஜூ கோபாலன் செக் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல கேரள தொழிலதிபர் கோகுலம் கோபாலன். இவர் தமிழகத்திலும் தொழில் செய்துவருகிறார். மலையாளத்தில் மம்மூட்டி, சரத்குமார் நடித்த ’பழசிராஜா’ உட்பட பல திரைப்படங்களைதயாரித்துள்ளார். தமிழில், கமல்ஹாசன் நடித்த ’தூங்காவனம்’படத்தைக் கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனலுடன்   இணைந்து தயாரித்துள்ளார். இப்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ’தனுசு ராசி நேயர்களே’என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இவரது மகன் பைஜூ கோபாலன். இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில் செய்துவருதாகத் தெரிகிறது. 

இவரது தொழில் கூட்டாளி, சென்னையை சேர்ந்த ரமணி. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரமணிக்கு சொந்தமான சில ஓட்டல்களையும் கிளினிக்குகளையும் வாங்க முடிவு செய்திருந்தார் பைஜூ கோபாலன். இதற்காக பைஜூ 2 கோடி திர்ஹாமுக்கு (சுமார் ரூ.39.5 கோடி) காசோலை கொடுத்திருந்தாராம். இந்த காசோலையை ரமணி வங்கியில் செலுத்தியபோது பணமில்லாமல் திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் பைஜூ ஓமனில் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை ஜாமீன் எடுக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன.