British Board of Film Classification reveals the synopsis of Mersal

தளபதி விஜய் மூன்றுவேடங்களில் மிரட்ட வரும் மெர்சல் படத்துக்கு 
பல்வேறு நெருக்கடிகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பிரிட்டனில் படத்தை வெளியிடுவதற்கு அந்நாட்டின் தணிக்கை குழு சான்று வழங்கியுள்ளது.

தேனாண்டாள் பிலிம்ஸ் மிக பிரமாண்டமாக தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் விஜய் சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு நடிப்பில் நாளை மறுநாள் தீபாவளியன்று வெளியாகவுள்ள மெர்சல் படத்தை 'முருகன் டாக்கிஸ் லிமிடெட்' நிறுவனம் பிரிட்டனில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. 

பிரிட்டனில் படத்தை வெளியிடுவதற்கான தணிக்கை சான்று பெற கடந்த அக்டோபர் 12ஆம் தேதி 'பிரிட்டிஸ் போர்டு ஆஃப் ஃபிலிம் கிளாசிஃபிகேசன்' முன்னிலையில் படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

படத்தை பார்த்த தணிக்கைக்குழு, இது 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் படம் என்று '12A' சான்று அளித்துள்ளது. மேலும் படத்தின் கதைக்களத்தையும், அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

அதில், "இது ஒரு ஆக்சன் த்ரில்லர் படம். ஒரு மேஜிக் செய்பவரும், மருத்துவரும் இணைந்து இந்திய மருத்துவ துறையில் நடக்கும் ஊழலை வெளிக் கொண்டு வர முயற்சிக்கின்றனர்". 

அதுமட்டுமல்ல இது வன்முறை காட்சிகள் அதிகம் உள்ள படம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 163 நிமிடம் ஓடக்கூடிய இந்த படத்தில் 5 நிமிடம் 44 வினாடிகள் அளவுக்கான சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.