சிம்பு ஈஸ்வரன் படப்பிடிப்பில்  நடுக்காட்டில் லுங்கியை தூக்கி கட்டிக்கொண்டு, மரக்கிளையில் தொங்கும் பாம்பை பிடித்து கோணிப்பைக்குள் போடுவது போன்ற காட்சி ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த காட்சி வைரலான மறு கணமே சிம்பு பாம்பை துன்புறுத்திவிட்டார் என்றும், உரிய அனுமதி பெறாமல் உயிருடன் பாம்பை பயன்படுத்தியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏகப்பட்ட செய்திகள் வெளியாகின.

இதையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாம்பு பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்பதால், சட்டப்பிரிவு 1972ன் படி சிம்பு செய்தது குற்றம் என வன உயிரின ஆர்வலர்கள் புகார் அளித்திருந்தனர்.

மேலும்  “ஈஸ்வரன் படத்தில் பாம்புகளை பயன்படுத்துவது தொடர்பாக எவ்வித அனுமதியும் பெறவில்லை என்றும், பாம்புகளை பயன்படுத்த அனுமதி கேட்கவில்லை” என்றும் மத்திய விலங்குகள் நல வாரியம் விளக்கமளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து படக்குழு சார்பில் இயக்குனர் சுதீந்திரன்,  பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டார். 

அதில், சிம்பு பாம்பை பிடித்து பையில் போடுவது போல் எடுக்கப்பட்ட அந்த காட்சி,  பிளாஸ்டிக்கால் ஆன போலியான பாம்பை பயன்படுத்தி எடுக்கப்பட்டது என்றும், அதை நிஜ பாம்பு போல் கிராபிக்ஸ் செய்ய இருந்ததாகவும், அதற்குள் அந்த வீடியோவை யாரோ வெளியிட்டு விட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினாலும் முறையான ஆதாரங்களுடன் விளக்கமளிப்போம் என்றும் படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய விலங்கு நல வாரியம் சின்புவின் 'ஈஸ்வரன்' பட குழுவினருக்கு பரபரப்பு நோட்டிஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் ஈஸ்வரன் பட போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியிடும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, நடிகர் சிம்புவிற்கு வனத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.