கடந்த 2017ம் ஆண்டு 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அறம்'. ஆழ்துளை குழாய் கிணறு ஒன்றில் விழுந்த குழந்தையை மீட்பது குறித்த கதையை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம், அனைத்து தரப்பினரின் பாராட்டுளையும், வரவேற்பையும் பெற்றது. 

இந்தத் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆன நிலையில், இதேபோன்று தற்போது, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம், தமிழகத்தையே உலுக்கி வருகிறது. 

31  மணி நேரத்திற்கும் மேலாகியும் சுர்ஜித்தை மீட்க முடியாமல் மீட்புக் குழுவினர் திணறி வருகின்றனர். குழந்தை சுர்ஜித் பாதுகாப்புடன் மீட்கப்பட வேண்டும் என ஒட்டுமொத்த மக்களுமே பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஆழ்துளை கிணறு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் கோபி நயினார், ராக்கெட்டுகள் மேல் இருக்கும் கவனம், சாதாரண மக்களுக்கும் பயன்படும் விஞ்ஞானத்திலும் இருக்க வேண்டும் என  தெரிவித்துள்ளார். 

ஆழ்துளை கிணறுகளில் சிக்கும் குழந்தைகளை மீட்க, புதிய இயந்திரங்களை கண்டுபிடித்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு வழங்க வேண்டும் என்றும், ஜேசிபி போன்ற இயந்திரங்கள், குழந்தையை மீட்பதற்கான இயந்திரம் கிடையாது என்றும், ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்க ஏன் புதிய இயந்திரங்களை கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.