அஜீத்தின் மூன்றாவது படமும்  எங்கள் நிருவனத்துக்குத்தான் என்று தம்பட்டம் அடித்து வந்த தயாரிப்பாளர் போனிகபூர்  ‘எங்கள் நிறுவனத்துடன் சேர்ந்து மூன்றாவது படம் நடிப்பது பற்றி இதுவரை அஜீத்துடன் பேசவில்லை’என்று பல்டி அடித்திருக்கிறார் 

வினோத் இயக்கியுள்ள ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் து 1ம் தேதியா 10ம் தேதியா என்பது உறுதியாகவில்லை.

நேர்கொண்ட பார்வை படத்தின் புரமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வரும் போனி கபூர், படம் குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அஜித் சரி என்று கூறினால் அவருடன் தொடர்ந்து பணியாற்றத் தயார் என்று கூறியிருந்தார். இதனால் அவர் அஜித்துடன் தொடர்ந்து 3 படங்கள் இணைந்து பணியாற்றவுள்ளதாக செய்திகள் வெளியாகின. மூன்று படங்களுக்கும் சேர்த்து அஜீத் ரவுண்டாக 150 கோடி சம்பளம் பேசியிருக்கிறார் என்று கூட செய்திகள் வெளியாகின.

இச்செய்திகளை முதலில் ரசித்து வந்த போனிகபூர் அஜீத் தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்ததாலோ என்னவோ தற்போது மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அஜித்துடன் மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன் என்று ஒரு பொய்யான செய்தியை ஊடகங்களில் பார்க்கிறேன். தெளிவுபடுத்திவிடுகிறேன். நேர்கொண்ட பார்வைக்குப் பின் ஒரு ஆக்‌ஷன் படத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். அவர் ஓர் இந்திப் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.ஆனால் ’அவர்’ இன்னும் உறுதி செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.