நிம்மதி இழந்த சீயான் விக்ரம்... ஒரே ஒரு போன் காலால் பரபரப்பான போலீசார்...!
இந்நிலையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள சியான் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. கடந்த ஜூன் 18ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட, மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் ரஜினி வீட்டை சோதனையிட்டனர். அதன் பின்னர் அந்த போன் கால் வதந்தி என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மர்ம நபர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார், எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில் ஜூலை 4ம் தேதி அன்று தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார். உடனடியாக மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டை சல்லடை போட்டு சோதனை நடத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதேபோல் தல அஜித் வீட்டிலும் வெடிகுண்டு உள்ளதாக போன் வர அங்கும் சோதனை நடைபெற்றது. ஆனால் அதுவும் வதந்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் மரக்காணத்தைச் சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் விஜய், அஜித் வீடுகளில் வெடிகுண்டு உள்ளதாக போன் செய்தது தெரியவந்தது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யாவின் பழைய அலுவலகத்திற்கும் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கடந்த மாதம் ஒரே நாளில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கும், அபிராமபுரத்தில் உள்ள தனுஷ் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து சோதனையில் அனைத்தும் பொய் என தெரிய வர போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள சியான் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வரும் போலீசார், சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் போன் செய்த மர்ம நபர் குறித்த உடனடி விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர்.
a