மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அந்த சட்டம் குறித்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் "தலைவி" பட ஷூட்டிங்கிற்காக ஐதராபாத்தில் இருந்த நடிகை கங்கனா ரனாவத் கூறிய கருத்து பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து வாய் திறக்காத பாலிவுட் நடிகர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும், பாலிவுட்டில் இருப்பவர்கள் அனைவரும் கோழைகள் என்றும் சகட்டு மேனிக்கு வறுத்தெடுத்தார். மேலும் மக்களுக்காக குரல் கொடுக்க பயந்தால், அவர்கள் அந்த இடத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார். 

இதனிடையே, தற்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் போராட்டம், சில இடங்களில் கலவரமாக மாறியுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள கங்கனா ரனாவத், "ஒரு போதும் போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது. நாட்டில் 3லிருந்து 4சதவீதம் பேர் மட்டுமே வரி கட்டுகின்றனர். மீதமுள்ளவர்கள் அவர்களை சார்ந்தே இருக்கின்றனர். அப்படி இருக்கும் போது பொது சொத்தான பேருந்துகளையும், ரயில்களையும் கொளுத்த யார் அதிகாரம் கொடுத்தது" என போராட்டக்காரர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த கருத்தை பார்த்த நெட்டிசன்கள், அடித்தாலும் அடித்தார் ஒரே அடியாக கங்கனா ரனாவத் அந்தர் பல்டி அடித்தார் என கிண்டல் செய்து வருகின்றனர்.