சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளிக் கூடத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது சந்திப்பதாக கூறி பார்வையற்ற சிறுவர்களை விஜய் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.

பிகில் படத்தை தொடர்ந்து கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது. தற்போது சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பை இயக்குனர் நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பூந்தமல்லியில் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த மூன்று நாளுமே படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். மாற்றுத்திறனாளிகள் பள்ளிக் கூடம் என்பதால் அங்கேயே ஏராளமான சிறார்கள் தங்கியுள்ளனர். வழக்கமாக இந்த பள்ளிக்கூடத்தில் படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் மிகப்பெரிய நட்சத்திரங்களின் படம் என்றால் பணம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி அனுமதி பெற்றுவிடுவதாக சொல்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் படம் என்பதால் அங்கு படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று நாட்களாக அங்கு படப்பிடிப்பு நடைபெற்ற போது வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூட அதிக கெடுபிடி காட்டப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் அங்கு பயிலும் மாணவர்கள் நடிகர் விஜயை சந்திக்க வேண்டும் என்று விரும்பியுள்ளனர்.

இதனை அடுத்து ஆசிரியர் ஒருவர் விஜயை சந்திக்க வேண்டும் என்று படக்குழுவினரிடம் கூறியதாகவும் இதனை தொடர்ந்து விஜயின் உதவியாளர் உதயகுமார் வந்து விஜயுடன் படப்பிடிப்பின் கடைசி நாளில் சந்திக்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்ததாகவும் அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார். படப்பிடிப்பின் கடைசி நாளில் விஜயை சந்திக்கும் ஆர்வத்துடன் மாணவர்கள் பல மணி நேரம் காத்திருந்ததாகவும் ஆனால் விஜய் படப்பிடிப்பு முடிந்து சொல்லாமல் கொள்ளாமல் பின்வாசல் வழியாக சென்றுவிட்டதாகவும் அந்த ஆசிரியர் தெரிவித்திருந்தார்.

ஒரு ஐந்து நிமிடம் மாணவர்களை சந்திக்காமல் செல்லும் அளவிற்கு விஜய் என்ன இரக்க குணம் அற்றவரா என்கிற கேள்வி எழுந்தது. இது குறித்து விசாரித்த போது வழக்கமாக இது போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறும் போது பலரும் விஜயை சந்திக்க வேண்டும் என்று விரும்புவார்கள் என்றும் அவர்கள் படப்பிடிப்பின் போது இடையூறு செய்யக்கூடாது என்பதற்காக விஜயின் உதவியாளர்கள் இப்படி பொய்யான வாக்குறுதிகளை அளிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அத்துடன் பூந்தமல்லி மாற்றுத்திறன் பள்ளி மாணவர்கள் விஜயை சந்திக்க வேண்டும் என்று அவரது உதவியாளர் உதயகுமாரிடம் கூறிய தகவல் விஜயிடம் சொல்லப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அப்படி சொல்லப்பட்டிருந்தால் விஜய் நிச்சயம் சந்தித்தித்திருப்பார் என்றும் கூறுகிறார்கள் படக்குழுவினர். இந்த விவகாரத்தில் விஜயின் உதவியாளர் உதயகுமார் காட்டிய அலட்சியம் தான் விஜய்க்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது என்றும் சொல்கிறார்கள்.

மற்றபடி அந்த சிறுவர்கள் தன்னை பார்க்க வேண்டும் என்று விரும்பியது விஜய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் படக்குழு திட்டவட்டமாக தெரிவிக்கிறது.