விஜய் - அட்லீ கூட்டணி 3வது ஒன்றிணைந்த படம் "பிகில்". தீபாவளி ட்ரீட்டாக திரைக்கு வந்த "பிகில்" திரைப்படம் வசூலில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு கோச்சாகவும், வயதான ராயப்பன் கெட்டப்பிலும் விஜய் இரட்டை வேடத்தில் மாஸ் காட்டியிருந்தார். 'பிகில்' படத்தில் கால் பந்தாட்டம் ஆடும் போது விஜய் அணிந்து வந்த சிவப்பு ஜெர்சி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தளபதி விஜய் பிரபல நடிகர் ஒருவருக்கு பரிசாக அளித்துள்ளார்.

 

சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, தெறி, பிகில் போன்ற படங்களில் நடித்தவர் சவுந்தரராஜா. வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் சவுந்தர் ராஜா குறித்து, பிகில் ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் கூட விஜய் பேசியிருந்தார். இந்த நிலையில் பிகில் படத்தில் விஜய் அணிந்திருந்த சிவப்பு ஜெர்சியை, அவரே தனக்கு பரிசளித்ததாக நடிகர் சவுந்தர் ராஜா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

 

அந்த பதிவில் சிவப்பு ஜெர்சியில் விஜய் இருக்கும் போட்டோவையும், தன்னிடம் அந்த ஜெர்சி இருக்கும் போட்டோவையும் பதிவிட்டுள்ள சவுந்தர் ராஜா. "இந்த ஜெர்சி பிகில் திரைப்படத்தில் விஜய் அண்ணா போட்டிருந்தது. அதை அவரே எனக்கு கிப்ட் பண்ணியிருக்காரு. இந்த வருடத்தில் எனக்கு கிடைத்த முக்கியமான பரிசு இதுதான். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி விஜய் அண்ணா" என பதிவிட்டுள்ளார்.