‘பிகில்’திருட்டுக்கதை வழக்கு கோர்ட்டைப் பொறுத்தவரை முடிவுக்கு வந்துவிட்டாலும், கதையைப் பறிகொடுத்தவரின் புலம்பல்கள் இன்னும் கொஞ்சமும் குறையவில்லை. அட்லியின் பிறந்த நாளான இன்று கூட தனது கதை என்று சொல்லும் கே.பி.செல்வா, தனது கதை உரிமை பறிபோனதற்கு ஒரு நீதிபதியின் தலையீடே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார். அந்த நீதிபதி, அட்லிக்கு மிகவும் நெருக்கமானவரான பாடலாசிரியர் விவேக்கின் அம்மா என்பது குறிப்பிடத்தக்கது.

பிகில் படத்தின் கதை என்னுடையது என்று சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கே.பி.செல்வா என்ன்னும் உதவி இயக்குநர் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட நீண்ட செய்திக்குறிப்பின் ஒரு பகுதியில், வழக்கைத் திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க உரிமை வழங்க மறுத்து விட்டது. முடிவில், வழக்கை வாபஸ் பெற்றதன் பேரில், தள்ளுபடி ஆனது என்று குறிப்பிட்டிருந்தது.

அதோடு, கிட்டத்தட்ட பெரிய படங்கள் அனைத்துமே கதை திருட்டு என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகும் இக்காலத்தில், பெரிய படங்கள் மற்றும் பெரிய திரை நட்சத்திரங்களின் புகழ் வெளிச்சத்தில், கொஞ்ச நேரம் உலா வரத்துடிக்கும் அனைத்து விளம்பர பிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது இந்த தீர்ப்பு என்றும் அந்நிறுவனம் கூறியிருந்தது.

அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்த கே.பி.செல்வா,காப்பி ரைட் கேஸ் ஐகோர்ட்ல தான் நடக்கணும், அதனால இந்த கேஸ சிட்டி சிவில் கோர்ட்ல டிஸ்மிஸ் பண்ணுங்க,அப்டின்னுதான் மட்டும்தான் கடந்த அஞ்சு மாசமா அவங்க வக்கீல் வாதாடுனாங்க,அதனால, நான் தான்  ஐகோர்ட்ல கேஸ பாத்துக்கலாம்ன்னு, சிட்டி சிவில் கோர்ட்ல திரும்பப் பெறும் மனு கொடுத்தேன்.  நீதிபதி அதை ஏற்றுக்கொண்டு  கேஸ டிஸ்மிஸ் பண்ணாங்க.இன்னும் ஒரு வாரத்துல ஐகோர்ட்ல கேஸ் ஃபைல் பண்ண போறேன் என்று கூறியிருந்தார். இவையிரண்டுமே ஆகஸ்ட் 25 ஆம் தேதி நிகழ்ந்தன.

இந்நிலையில், இன்று காலை (செப்டம்பர் 21,2019) கே.பி.செல்வாவின் முகநூல் பதிவில்,பாடலாசிரியர் விவேக்கின் அம்மா மாதிரி என் அம்மாவும் நீதிபதியா இருந்திருந்தா உத்தரவை எனக்கு சாதகமா மாத்தி எழுதி இருக்கமுடியுமோ? என்றதோடு எல்லோருக்கும் நீதி கிடைப்பதில்லை என்றும் பதிவிட்டிருந்தார். ‘பிகில்’படத்தில் ‘சிங்கப்பெண்ணே’,’வெறித்தனம்’ ஆகிய இரு பாடல்களை எழுதியிருக்கிறார் விவேக். என்ன நடந்தது? என் இந்தப் பதிவு? என்று விசாரித்தால், சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது என்கிற உத்தரவு நகலைப் பெறவே மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டதாம்.அது இருந்தால்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும் என்பதால் தினந்தோறும் நீதிமன்றம் சென்று முறையிட்டும் அந்த உத்தரவு நகலை நேற்றுத்தான் அவரால் பெற முடிந்ததாம்.

அதைப் பெற்று படித்துப் பார்த்தால் மேலும் அதிர்ச்சி, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யமுடியாது என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். உத்தரவு நகலை உடனே கொடுக்காமல் இழுத்தடித்தது உத்தரவில் மேல்முறையீட்டுக்குத் தடை ஆகிய விசயங்களை தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியே பிகில் படக்குழுவினர் பெற்றிருக்கிறார்கள் என்பதைக் குறிக்கவே இந்தப் பதிவு என்று சொல்கிறார்கள்.  இன்று இயக்குநர் அட்லியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.