இரண்டாவது வாரத்தில் பிகில் பட வசூல் சரசரவென இறங்கியதைத் தொடர்ந்து அப்படத்திலிருந்து, ஒரு பெண்ணை விஜய் தொடர்ந்து ‘குண்டம்மா குண்டம்மா’என்று கிண்டல் செய்யும் காட்சிகள் உட்பட வேறு சில காட்சிகளும் நீக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

‘பிகில்’படத்தில் நடித்த காமெடி நடிகரின் மகள் இந்திரஜாவை ’குண்டம்மா குண்டம்மா’ என்று விஜய்  உசுப்பேத்திய காட்சிக்கு வலதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் அக்காட்சியில் நடிக்க விஜய் தயங்கியதையும் அதற்காக தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் அவர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகம் முழுக்க படத்தின் வசூல் மிக வேகமாகக் குறைந்து வருவதை அறிந்த பட நிறுவனம் படம் மூன்று மணி நேரங்கள் ஓடுவதை ஒரு முக்கிய குறையாகக் கண்டறிந்தது. இது குறித்து ரிலீஸுக்கு முன்னரே இயக்குநர் அட்லியிடம் கோரிக்கை வைத்தும் அவர் ஏற்றுக்கொள்ளாததை கவனத்தில் கொண்டு இம்முறை அவரை அணுகாமலே படத்தின் உதவி இயக்குநர்களை வைத்து சுமார் 10 முதல் 15 நிமிடம் வரை காட்சிகளை ட்ரிம் செய்ய நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகவும், அதில் உருவத் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்யப்பட்ட குண்டம்மா காட்சிகள் அத்தனயும் வெட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் பிராமண பெண்ணை டவுசர் போட வைத்து கால்பந்து ஆடவைத்த காட்சிகளுக்கும் பலத்த எதிர்ப்பு நிலவி வருவதால் அக்காட்சிகளும் வெட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.