’பிகில்’பட ரிலீஸுக்கு சரியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தயாரிப்பாளருடன் இயக்குநர் அட்லீ மோதல் போக்கைக் கடைப்பிடித்துள்ளதாக அப்படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்பிரச்சினையில் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் நடிகர் விஜய் கள்ள மவுனம் காப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’பிகில்’ படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அண்மையில் அப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவின் போதும் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இப்படத்துக்கான விஜய் அறிமுகக் காட்சி இன்னும் படமாக்கப்படவில்லை என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

கதைப்படி  படத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சியையொட்டி ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் இடம்பெறுவது போன்றதொரு காட்சி மிகப் பிரம்மாண்டமாகப் படமாக்கப்படவேண்டியிருக்கிறதாம்.இதற்காக மதுரையிலுள்ள ஒரு பெரிய கல்லூரியில் இரண்டுநாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்று அட்லீ சொல்லிக்கொண்டிருக்கிறாராம். சுமார் இரண்டாயிரம் துணை நடிகர்களை வைத்து எடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் , இதற்காக மதுரை போய்வந்தால் செலவு பன்மடங்கு ஆகிவிடும் எனவே சென்னையிலேயே அந்தக் காட்சியைப் படமாக்கிவிடுங்கள் என்று தயாரிப்பு நிறுவனம் சொல்லியிருக்கிறதாம்.

அத்தோடு நில்லாமல்  ஒரு பெரிய பள்ளியிடம் பேசி அப்பள்ளி முழுவதும் வெள்ளையடித்து வர்ணமும் பூசப்பட்டதாம். எல்லா வேலைகளும் முடிந்த நிலையில், அப்பள்ளிக்கு விசிட் அடித்த அட்லீ ‘இந்த இடம் என் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இல்லை. எனவே  இங்கு எடுக்க மாட்டேன்’ என்று மிகவும் கறாராகச் சொல்லிவிட்டாராம். இதனால் எரிச்சலடைந்த படத் தயாரிப்பு நிறுவனம் விஜயிடம் பஞ்சாயத்தைக் கொண்டுபோக ‘நான் ஷூட்டிங்குக்காக என்னைக்குத் திரும்பணும்னு மட்டும் சொல்லுங்க. லொகேஷன் மேட்டர்ல நான் தலையிட முடியாது’என்று நடுநிலை வகிக்கத் துவங்கிவிட்டாராம்.