நடிகர் விஜய் மீது இருந்த கோபத்தால் விஜயின் ‘பிகில்’படத்துக்கு காலைக் காட்சி அனுமதிகள் கிடைக்காது.இதனால் தமிழக தியேட்டர் வசூலில் பெரும் பின்னடவைச் சந்திக்க நேரிடும் என்ற நிலையில் தமிழக அரசுக்கும் விஜய்க்கும் சமாதானம் ஆகிவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன. 

தீபாவளிக்கு ரிலீஸாகும் இரு படங்களில் ‘கைதி’எப்பிரச்சினைகளிலும் சிக்காமல் தெம்பாக ரிலீஸாகும் நிலையில் விஜயின் பிகில் படத்துக்கு தொடர்ந்து பஞ்சாயத்துகள் வந்த வண்ணம் இருந்தன. கறிக்கடைக்காரர்கள் முதல் பூக்கடைக்காரர்கள் வரை இப்படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில் திருட்டுக்கதை என்ற பஞ்சாயத்துகளும் இருந்து வந்தன.

இதனால் படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கியிருந்த விநியோகஸ்தர்கள் பெரும் அச்சத்திலிருந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் தரப்பு பெருமளவில் இறங்கிவந்த நிலையில் இப்படத்துக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கிடைக்கவிருக்கிறதென்ற செய்தி விநியோகஸ்தர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் தீபாவளிக்கு மறுநாளான 28ம் தேதி திங்கட்கிழமையையும் தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ள நிலையில் இதை தங்களுக்குக் கிடைத்த ஜாக்பாட்டாகவே பிகில் விநியோகஸ்தர்கள் கருதுகிறார்கள். தற்போதைய நிலவரப்படி வெள்ளி,சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 4 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளதால் பெரும் வசூலை அள்ளி லாபம் பார்த்துவிடலாம் என்பது விநியோகஸ்தர்களின் கணக்கு.