பிகில் படம் 300 கோடி வசூல் செய்ததாக வெளியான தகவல்களை அடுத்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ், நடிகர் விஜய், அந்த படத்திற்கு பைனான்ஸ் செய்த பிரபல பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

நடிகர் விஜய்க்கு சொந்தமான சாலிகிராமம், நீலாங்கரை, பனையூர் வீடுகளில் 16 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், தற்போது விஜய் மற்றும் அவரது சங்கீதாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் நடிகர் விஜய் திரைப்படங்களுக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

விஜய் மற்றும் ஏஜிஎஸ் சினிமாஸ்-க்கு சொந்தமான இடங்களில் இருந்து எவ்வித பணமும் பறிமுதல் செய்யப்படாத நிலையில், பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து இதுவரை 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: சிக்கியது முக்கிய ஆவணம்... பிகில் பட பைனான்சியர் அன்புச்செழியனுக்கு அடுத்த ஆப்பு...!

தற்போது வரை அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடு, அலுவலங்களில் தொடர் சோதனை நடைபெற்று வரும் நிலையில்,  முக்கிய ஆவணங்கள், அடமான பத்திரங்கள் மற்றும் காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: "பிகில்" படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் இவ்வளவா?.... ஐ.டி.ரெய்டில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள், அடமான பத்திரங்கள், காசோலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்த போது சுமார் 300 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பைனான்சியர் அன்புச்செழியன், 2003ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என கூறப்பட்டு வரும் நிலையில், பெருந்தொகைக்கு வரி ஏய்ப்பு செய்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.