ஆளும் அ.தி.மு.க. அரசுடனான பேச்சு வார்த்தை, டீல்,பஞ்சாயத்து போன்றவைகள் சரியான முடிவுக்கு வராததால் விஜய்யின் ‘பிகில்’படம் தீபாவளிக்கு வருமா என்கிற சந்தேகம் மேலும் மேலும்  வலுத்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட டென்சனுக்கு ஆளாகியுள்ளனர்.

‘பிகில்’பட ஆடியோ நிகழ்ச்சியின் விஜய்யின் பேச்சுக்கு ரிலீஸ் சமயத்தில் கடுமையான ரியாக்‌ஷன் இருக்கும் என்று தமிழக மக்கள் கணித்தது பொய்யாகவில்லை. எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தபோது சென்சார் மூலம் சிறிது சுணக்கம் காட்டிய எடப்பாடி அரசு பின்னர் அதிலிருந்து படத்தை விடுவித்து நேரடி மோதலில் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக முதல்வரை சந்திக்க தயாரிப்பாளர் தரப்பு எவ்வளவோ முயன்றும் அப்பக்கமிருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. முதல்வரும் அவமானப்பட்ட அமைச்சர்களும் விஜயே நேரடியாக ‘இறங்கி’வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்களாம். இதனாலேயே ஏற்கனவே செத்துப்போன ஒரு கதைத் திருட்டு வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டு சென்னை உயர்நீதி மன்றத்துக்கு வந்தது. மூன்று தினங்களாக நடந்து வரும் அவ்வழக்கில், ஏதோ தீபாவளிக்கு இன்னும் ஏழெட்டு வாரங்கள் இருப்பதுபோல், இன்று அடுத்த தேதி கூட குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் பணத்திற்காக அல்லது விளம்பரத்திற்காகத்தான் கே.பி செல்வா வழக்கு தொடர்ந்துள்ளார் என அட்லி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அதற்கு செல்வா தரப்பு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம் தீர்ப்பை அடுத்த தேதி கூட அறிவிக்காமல் ஒத்திவைத்துள்ளது

இதனால் தமிழகம் முழுக்க உள்ள விஜய் ரசிகர்கள் கொந்தளிப்புக்கு ஆளாகிக்கொண்டிருக்க, எதற்கெடுத்தாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட்கள் போட்டுக் கொண்டிருக்கும் தயாரிப்பாளரின் மகள் அர்ச்சனா கல்பாத்தி இரு தினங்களாய் மயான அமைதி காக்கிறார்.