கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து வந்த காலமெல்லாம் கரையேறி விட்டது. இப்போதெல்லாம் தங்களது ஆஸ்தான நாயகர்களை பிரம்மாண்டப்படுத்தி கொண்டாடுகிறார்கள் அவர்களது ரசிகர்கள். அந்த வகையில் விஜய் ரசிகர்கள் சமீபகாலமாக மெர்சல் காட்டி வருகிறார்கள். 

தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் ரசிகர் கூட்டத்தை அதிகமாக சேர்த்து வைத்திருக்கிறார் விஜய். அவருடைய ஒவ்வொரு படங்கள் திரைக்கு வரும் போது போட்டி போட்டு மிக பிரம்மாண்ட கட் அவுட்கள் வைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிடுவார்கள். ‘பைரவா’ திரைப்படம் வெளிவந்த போது திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த  விஜய் ரசிகர்கள் 150 அடியில் கட்அவுட் வைத்து அனைவரையும் வியக்க வைத்தனர். விஜய்யின் பிறந்தநாளையொட்டி சுமார் நான்காயிரம் அடியில் விஜய்க்கு பிறந்தநாள் போஸ்டர் ஒட்டி மிக பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைத்திருந்தனர்.

 

இந்திய வரலாற்றிலேயே இதுவரை வேறு எந்த நடிகருக்கும் இவ்வளவு பிரம்மாண்டமாக நான்காயிரம் அடி நீளத்தில் போஸ்டர் ஒட்டியது கிடையாது. தற்போது 2019 துவங்கவுள்ள நிலையில் புதிய காலண்டர் ஒன்றை செய்துள்ளனர். 20 அடி உயரத்திற்கு விஜய் போட்டோவுடன் உள்ள அந்த காலண்டர் தான் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகப்பெரியது. அந்த காலண்டரை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.