பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சி ஒரு வாரம் மட்டுமே முடிந்துள்ள நிலையில் இந்த வருடத்தின் டைட்டில் வின்னர் யார் என்பதை அதற்குள் முந்திரிக்கொட்டையாக அலச ஆரம்பித்திருக்கிறார்கள் நம்ம நெட்டிசன்கள். இப்போதைக்கு லாஸ்லியாவின் பெயரே அதிகம் அடிபடுகிறது.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வந்தவர் நடிகை ரித்விகா. இவர் ’பிக் பாஸ் சீசன் 2’ வில் பட்டம் வென்றாலும் பிக் பாஸ் வீட்டினுள் இவர் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக தான் இருந்தார் என்றும் பிரச்சனைகளில் இருந்து விலகி இருந்தார் என்றும் அதனாலேயே அவர் பட்டத்தை வென்றார் என்ற கருத்தும் உண்டு. 

 இந்த நிலையில் இதே பாணியைத் தான் தற்போது பிக் பாஸ் வீட்டினுள் லாஸ்லியா பின்பற்றி வருகிறார் என்று வலைதளங்களில் சிலர் காரணகாரியத்தோடு விளக்குகிறார்கள். பரிட்சயம் இல்லாத ஒரு சில போட்டியாளர்களும் இந்த சீசனில் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் லாஸ்லியாவும் ஒருவர். இலங்கையைச் சேர்ந்த செய்தி தொகுப்பாளரான இவர் தான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலான ரசிகர்களின் பேவரைட் போட்டியாளராக இருந்து வருகிறார். 

 இவருக்கு தற்போது சமூக வலைதளத்தில் பலதரப்பட்ட ஆர்மிகள் துவங்கப்பட்டுள்ளன. லாஸ்லியா அழகாக இருப்பதால் அவருக்கு இவ்வளவு சப்போர்ட் இருக்கிறது என்று ஒரு சிலரும், லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எது நடந்தாலும் அதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது இல்லை என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். அதே போல பிக் பாஸ் வீட்டினுள் பெரிய சண்டை வந்தால் கூட அதில் கலந்து கொள்வது இல்லை லாஸ்லியா. இது அப்படியே சென்ற சீஸன் வின்னரான ரித்விகாவின் காப்பி.

இதை ஒட்டி  இவரை கடந்த பிக் பாஸ் வின்னரான ரித்விகாவுடன் இணைத்து ஒரு மீம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அத்தோடு நில்லாமல் ரித்விகா அந்த மீம்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கதிலும் பகிரவே படு உற்சாகமான லாஸ்லியா ஆர்மி இந்த வருட டைட்டில் வின்னர் நம்ம தலைவியேதான் என்று முடிவே கட்டிவிட்டார்கள்.