பிக்பாஸ் சீஸன் 3 போட்டியில் முகேன் வின்னராகத் தேர்வு பெற்று பரிசுத் தொகையான 50 லட்சத்தைத் தட்டித்தூக்கினார். நடன இயக்குநர் சாண்டி இரண்டாவது இடம் பிடித்து ரன்னர் பட்டம் பெற்றார்.

17 போட்டியாளர்களுடன் ஜூன் 23ம் தேதியன்று துவங்கிய பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சி இன்று இரவு சற்றுமுன்னர் முடிவடைந்தது. காதல், சண்டை, அப்பா மகள் பாசம் என உணர்வுகளால் நிரம்பி வழிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வந்தார்.

ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்கள் வட்டம் இருந்துவந்த நிலையில் தர்ஷன் தான் இந்த முறை டைட்டில் வின்னர் என்ற பேச்சும் பார்வையாளர்கள் மத்தியிலும், போட்டியாளர்கள் மத்தியிலும் நிலவி வந்தது. ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பிக்பாஸின் கூற்றுப்படி கடந்த வாரம் தர்ஷன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அடுத்து  இன்று மாலை 6 மணிக்குத் துவங்கிய இறுதிநாள் நிகழ்ச்சி ஆடல்,பாடல், வீணை இசை மற்றும் காமெடி நிகழ்ச்சியுடன் 5 மணி நேரங்களுக்கு நீடித்தது. இருந்த 4 போட்டியாளர்களுல் முதலில் ஷெரின் வெளியேற்றப்பட அடுத்து லாஸ்லியா வெளியேறினார்.

இந்நிலையில் அடுத்த நிகழ்ச்சிகள் துவங்கி முடிவுகள் வெளிவரும் முன்பே முகேன் வின்னர் பட்டம் பெற்றதாக அவர் டிராபியுடன் நிற்கும்படங்கள் வலைதளங்களில் வைரலானது. உண்மையில் நிகழ்ச்சியின் முடிவுகள் லீக் ஆகிவிட்டதா அல்லது இந்நிகழ்ச்சிக்காக விஜய் டிவி அடித்த விளம்பர ஸ்டண்டுகளில் இதுவும் ஒன்றா சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவியது. சரியாக 10.50 மணிக்கு இறுதிப் போட்டியாளர்கள் இருவரையும் சாரட் வண்டியில் அழைத்து வந்த கமல் வரும் வழியில் ‘ராஜா கைய வச்சா’பாடலுக்கு சாண்டி, முகேன் இருவருடனும் நடனம் ஆடியபடி மேடை வந்து சேர்ந்தார். முன்பே செய்திகள் கசிந்தபடி முகேனே வின்னராக அறிவிக்கப்பட்டார்.