'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் பிரபல சீரியல் நடிகை நிஷா. இதை தொடர்ந்து 'முத்தாரம்', 'ஆபிஸ்', 'தெய்வமகள்', 'நெஞ்சம் மறப்பதில்லை' போன்ற பல சீரியல்களை நடித்துள்ளார்.

மேலும், வெள்ளித்திரையில் 'இவன் வேற மாதிரி' , 'நான் சிகப்பு மனிதன்' , 'என்ன சத்தம் இந்த நேரம்' , 'வில் அம்பு' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.

இவர் பிரபல மாடலும், நடிகருமான கணேஷ் வெங்கட்ராமை கடந்த 2015 ஆம் ஆண்டு காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். மேலும் கணேஷ் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில், வெற்றிகரமாக 100 நாட்கள் உள்ளே இருந்து, இறுதி போட்டியாளர்களின் ஒருவராக இருந்தவர்.

இந்நிலையில், திருமணம் ஆகி மூன்று வருடத்திற்கு மேல் ஆகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் காதல் ஜோடிகள் போல் ஜாலியாக சுற்றி வந்த இந்த தம்பதிகளுக்கு, தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

இதனை கணேஷ் மிகவும் மகிழ்ச்சியுடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.