திருச்சி, மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் கடந்த 25ம் தேதி 2 வயது குழந்தை சுஜித் வில்சன் தவறி விழுந்தான். அவனை மீட்கும் பணி இரவு பகல்பாராது கடந்த 4 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால், இப்பணிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து, குழந்தை சுஜித் இறந்துவிட்டதாக இன்று அதிகாலை அறிவிக்கப்பட்டது.  

இதையடுத்து, ஆழ்துளைக் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில், மீட்கப்பட்ட குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் சுஜித்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து திரைபிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் ஆதங்கத்தையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், "பிக்பாஸ்" புகழ் நடிகர் கவின் தனது ஆதங்கத்தினையும், வருத்ததையும் தெரிவித்துள்ளார்.

 

அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘நியாயமே இல்லாத மரணம்’ என  கவின் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்  #WeAreSorrySurjith என்றும் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவைத் தொடர்ந்து, கவின் ஆர்மியினர் சமூகவலைத்தில் #RIPSurjith #WeAreSorrySurjith போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.