’என்னைத்திருமணம் செய்துகொள். இல்லாவிட்டால் சுட்டுக்கொன்று விடுவேன்’ என பிரபல போஜ்புரி நடிகைக்கு துப்பாக்கி முனையில் காதல் மிரட்டல் விடுத்த வாலிபரை ஒரு நீண்ட போராட்டத்துக்குப்பின் போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.

பிரபல போஜ்புரி நடிகை ரிது சிங். இவர் இப்போது துலாரி பிடியாஎன்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக, 70 பேர் கொண்ட குழு, மும்பையில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்துக்கு சென்றுள்ளது. அங்குள்ள ராபர்ட்ஸ்கன்ச் நகரில் நட்சத்திர ஓட்டலில் குழுவினர் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று ஓட்டலுக்கு வந்த இளைஞர்ஒருவர், நடிகை ரிது சிங்கின் அறை எங்கிருக்கிறது என்று தெரிந்துகொண்டார். பின்னர் 11 மணியளவில், யாருக்கும் தெரியாமல் எப்படியோ அறைக்குள் நுழைந்த அவர், துப்பாக்கியை காட்டி, தன்னைத்திருமணம் செய்துகொள்ளும்படி மிரட்டியுள்ளார்.

இதை எதிர்பார்க்காத ரிது சிங் அலறினார். அவர் சத்தம் கேட்டு அங்கிருந்த அசோக் என்ற வாலிபர், அறைக்குள் ஓடி வந்தார். அவரை அந்த நபர், துப்பாக்கியால் சுட்டார். அசோக்கின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கீழே சாய்ந்தார்.துப்பாக்கி சத்தம் கேட்டதை அடுத்து ஓட்டல் ஊழியர்கள் நடிகையின் அறைக்கு ஓடி வந்தனர். இது தொடர்பாக போலீசுக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்து கிடந்த அசோக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் போலீசார் அங்கு வந்து அந்த வாலிபரிடம் அறையை விட்டு வெளியே வருமாறு கூறினர். ஆனால் அவர், போலீசாரை நோக்கியும் சுட்டார். இதில் போலீஸ்காரர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

சுமார் ஒன்றரை நேர போராட்டத்துக்குப் பின், துப்பாக்கியால் சுட்ட இளைஞரைபோலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அருகி லுள்ள ஜான்பூரைச் சேர்ந்த பங்கஜ் என்பதும் ரிது சிங்கைத் தீவிரமாகக் காதலித்து வந்ததும்  தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு படப்பிடிப்பு குழுவினர் மும்பை திரும்பிவிட்டனர். இப்படி ஒரு திருமண மிரட்டலை சற்றும் எதிர்பாராத நடிகை ரிது சிங், அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருப்பதாக படக்குழுவினர்தெரிவித்துள்ளனர்.