*    புயல் பாதித்த இடங்களில் அமைச்சர்களால் ஊருக்குள் நுழைய முடியவில்லை. மணியன் மட்டுமல்ல, காமராஜ், துரைக்கண்ணு போன்றோருக்கும் இதே நிலைதான். மக்கள் கொதித்துக் கிடக்கிறார்கள். பாதுகாப்பு போலீஸ் புடைசூழத்தான் சொந்த தொகுதியில் கால் வைக்க வேண்டிய நிலை! என்று டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார். 
(ஆமா, அண்ணன் ஆர்.கே.நகர் தொகுதிக்குள்ளார ஒண்டியா நுழைஞ்சு, இருபது ரூபாய்க்கு சில்லரை மாத்தி அதை இருபது பேருக்கு பிரிச்சு கொடுத்துட்டு வர்றாரு தினமும்.)

*    இளவரசியின் வீட்டு பீரோவிலிருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்று வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 
(பயபுள்ளைகளுக்கு எங்கே கை வெச்சா லம்ப்பா எல்லாமே கிடைக்குமுன்னு தெரிஞ்சே கை வெச்சிருக்கானுங்க.) 

*    அரசியலை விட்டு நான் ஒதுங்கிவிட்டேன். எனக்கும் வயதாகிவிட்டது ரஜினி, கமலுக்கு வயதாகிவிட்டது. ஆனாலும் அவர்கள் என் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வந்தால் இயக்குவேன்! என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார். 
(ஆமாண்ணே, இவரு எப்ப அரசியலுக்குள்ளே இருந்தாரு? மா.செ.  வா இருந்தாரா? கொ.ப.செ.வா இருந்தாரா இல்ல ந.செ.வா இருந்தாரா?)

*    புயல் பாதித்த பகுதிகளில் பள்ளி பாடப்புத்தகங்கள் ஒரு வார காலத்திற்குள் பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்! என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
(அக்காங்! அப்படியே நீங்க வழங்கிட்டாலும்...வெயிலு புரட்டி எடுத்துட்டு இருக்குற பகுதிகள்ளேயே இன்னும் ரெண்டாம் பருவ புத்தகத்தை  இன்னமும் சமூகம் வழங்கலன்னு போராட்டம் நடக்குது. இதுல நீங்க புயலுக்கே புத்தகம் கொடுத்திடூவிங்களாக்கும்?)

*    கஜா சுழற்றியடித்து துவம்சம் செய்த நான்கு மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்! என்று மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 
(ஆபீஸர், ஏற்கனவே கஜா காட்டுன காட்டுல கெறங்கிப் போய் கெடக்கிற குடிமகன்களுக்கு நீங்க கொடுத்திருக்கிற ஜட்ஜூமெண்டு ரொம்ப தப்பு. குடிக்க தண்ணி இல்லேன்னு சொல்லுங்க, ஏத்துக்குறோம். ஆனா ‘அடிக்க’ தண்ணீர் இல்லைன்னு சொல்றது எந்த ஊரு நியாயமுங்க?)