தனது அபிமானத்துக்குரிய நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அவர்களது நீண்டகால சினிமா சேவையைப் பாராட்டி மாபெரும் விழா நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்.1960ல் ‘களத்தூர் கண்ணம்மா’ மூலம்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், தனது 60 வது வருடத்தை நெருங்கியிருக்கிறார். கமல் பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், ஒரு கைதியின் டைரி என நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல், ரஜினியும் 16 வயதினிலே, கொடி பறக்குது என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். ’கொடி பறக்குது’படத்துக்குப் பின்னர் ரஜினி கமல் இருவரையும் இணைத்து பாரதிராஜா எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.இந்நிலையில், இருவரது திரை உலக சாதனைகளையும் பாராட்டி விழா நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டிருக்கிறார். இதுகுறித்து, இருவரிடத்திலும் அவர் பேசி, ஒப்புதல் பெற்றுவிட்டதாகவும், இந்த விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாகவும் பாரதிராஜாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.