’எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் என் உயிர்த்தோழன் இளையராஜாவைச் சந்தித்தேன். இயலும் இசையும் இணைந்தது. இதயம் என் இதயத்தைத் தொட்டது’என்று உணர்ச்சி வசப்பட்டு சற்று நேரத்துக்கு முன் ட்விட் செய்திருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.

’16 வயதினிலே’ காலத்திலிருந்தே இந்த இரு ராஜாக்களின் நட்பு உலகம் அறிந்தது. சினிமாவில் நுழைவதற்கு முன்பே ஒன்றாக வாய்ப்புத் தேடிய நண்பர்கள். அந்த நட்பில் கடலோரக் கவிதைகள் [1986] ஒரு விரிசல் ஏற்பட தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு வெவ்வேறு இசையமைப்பாளர்களிடம் போன பாரதிராஜா, அடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் ‘என் உயிர்த்தோழன்’என்றபடி ராஜாவிடம் வந்தார். மீண்டும் ‘புது நெல்லு புது நாத்து’,’நாடோடித் தென்றல்’என்று தொடர்ந்த கூட்டணியில் மீண்டும் விரிசல் ஏற்படவே இருவரும் மனக்கசப்புடன் பிரிந்தனர்.

அடுத்து கிழக்குச் சீமையிலே ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி அமைத்த பாரதிராஜா, இளையராஜாவை விட்டு முற்றிலும் ஒதுங்கினார். ஏதாவது பொது நிகழ்ச்சிகளில் இருவரும் சந்திக்கும்போது சம்பிரதாயத்துக்காக பேசிக்கொண்டால் உண்டு என்கிற அளவில் மட்டுமே அவர்கள் நட்பு நீடித்தது. இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தால் ராஜா வெளியேற்றப்பட்ட செய்தி கேட்டு தனது நண்பனுக்காக கொந்தளித்த பாரதிராஜா, அவருக்காக பல தரப்புகளிடம் பேசியதாக செய்திகள் வந்தன.

இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர், வைகை நதிக்கரையோரம், தான் ராஜாவுடன் காரில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வரிசையாக பதிவிட ஆரம்பித்த பாரதிராஜா மிகவும் உணர்ச்சி வசப்பட்டு,...எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் என் உயிர்த்தோழன் இளையராஜாவைச் சந்தித்தேன். இயலும் இசையும் இணைந்தது. இதயம் என் இதயத்தைத் தொட்டது என்று பதிவிட்டுள்ளார். அப்படங்களை பரவசமுடன் வைரலாக்கி வரும் ராஜாக்களின் ரசிகர்கள் மீண்டும் இணைந்து பழைய மேஜிக்கைத் தொடருங்கள் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.