*    ரஜினியின் தர்பார் பட இசைவெளியீட்டு விழாவில், நடிகர் ராகவா லாரன்ஸ் ‘அந்த காலத்தில் கமல்ஹாசனின் போஸ்டரில் சாண்டியடித்தேன்’ என்று பேசிய பேச்சு பெரும் பஞ்சாயத்தை கிளறிய நிலையில், ரஜினி சொல்லியதால் வருத்தமும் தெரிவித்தார் அவர் வெளிப்படையாக. ஆனால் கமல் தரப்பு ஆறவில்லை. சோஷியல் மீடியாவில் ராகவாவை வைத்து வெளுக்கின்றனர். அதிலும் நடிகை ஸ்ரீரெட்டி ராகவாவை பற்றி பேசியதை தோண்டி எடுத்து சொல்லி அடிக்கின்றனர். 
(பேய் நடிகருக்கு பேயடிச்சு கெடக்குது போல)

*    தமிழ்சினிமாவின் மைல் கல்! என்று பெயரெடுத்த நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை சமுத்திரக்கனி, சசிக்குமார் டீம் எடுத்து வைத்துவிட்டு காத்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், தயாரிப்பாளர் நந்தகோபாலுடன் பண விவகாரம் முற்றிக் கொண்டிருக்கிறது. தனக்கும் சசிக்கு சில கோடிகள் நஷ்டமானாலும் பரவாயில்லை என்று மிக குறைந்த லாபத்துக்கு  இறங்கி வந்திருக்கிறார் சமுத்திரக்கனி. 
(சம்போ சிவ சம்போ)

*    லைக்கா நிறுவனம் தன்னை வெறுமனே மேடைப் பேச்சு மற்றும் மரியாதைக்காக மட்டுமே விழாக்களுக்கு அழைத்துப் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால் தனது படங்களின் ரிலீஸ் மற்றும் புதுப்பட தயாரிப்புக்காக எந்த உதவியும் பண்ணுவதில்லை என்பதில் செம்ம கடுப்பில் இருக்கிறாரா இயக்குநர் பாரதிராஜா. 
(ரஜினி கமலை வெச்சு 76 வயதினிலே எடுங்க தல)

*    தாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் துவங்கிவிட்டது. புராண கதையான இப்படத்திற்கு யானைகள், குதிரைகளை பயன்படுத்த வேண்டியது அவசியம். ஆனால் இந்தியாவில் இதற்கு கடும் கெடுபிடிகள், பயன்படுத்த வாய்ப்பில்லாத நிலை இருப்பதாலே மலேஷியா போய்விட்டாராம் மணி. 
(இருட்டுல இருக்குற யானை கிராபிக்ஸா, ஒரிஜினலான்னு எவனுக்கு தெரியப்போவுது?)

*    தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் செம்ம லேட்டாக ரிலீஸானாலும், ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படது. ஆனால் செமத்தியாக ஊத்திக் கொண்டது. தயாரிப்பாளர் மதனுக்கு ஏக நஷ்டம். இந்த நிலையில் சிவகார்த்திகேயன், இந்த தயாரிப்பாளருக்கு ஒரு கால்சீட் தர சம்மதித்திருக்கிறாராம். 
தனுஷால் ஏற்பட்ட நஷ்டத்தை இவர் சரி செய்ய இருக்கிறாராம். 
(வளர்த்த கெடா வேலைய காட்டுதுலே செதம்பரம்)