பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'தபாங் 3' படத்தில், சல்மான்கானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளார். 'Wanted' படத்தின் வெற்றிக்குப் பிறகு, 10 ஆண்டுகள் கழித்து சல்மான் கான் - பிரபுதேவா கூட்டணி அமைந்துள்ளது. 'தபாங்' சீரிஸின் 3-வது பாகமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை சல்மான் கான், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் தயாரித்துள்ளார்.


சுல்புல் பாண்டே என்ற கேரக்டரில் சல்மான் நடித்துள்ள 'தபாங் 3' படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என 4 மொழிகளில் வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகிறது. இந்தப் படத்தை அனைத்து மொழிகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.தபாங்-3 ரிலீஸ் ஆவதற்கு முன்பே, மீண்டும் சல்மான் கான் - பிரபுதேவா கூட்டணி சேர்ந்துள்ளது.

 'ராதே' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய படத்தில் சல்மானுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், சொஹைல் கான், ரந்தீப் ஹோண்டா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இவர்களை தொடர்ந்து இந்தப் படத்தில் வில்லனாக நமது தமிழ் திரையுலகைச் சேர்ந்த 'காதல்' ஹீரோ பரத் நடிக்கிறார். இந்த மகிழ்ச்சிக்குரிய தகவலை, பரத்தே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

'ராதே' படத்தில் நடிப்பதன் மூலம், சல்மான் கானுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு நனவாகிவிட்டதாகத் அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதற்காக, இயக்குநர் பிரபுதேவாவுக்கும் மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.
‘ராதே’ படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், தற்போது நடிகர் பரத்தும் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். அப்போது, சல்மான்கான், பிரபுதேவாவுடன் தனித்தனியே எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பரத்,  தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகைத் தாண்டி, பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள பரத்துக்கு, திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.