’கோச்சடையான்’ படத்தின் படுதோல்வி ரஜினியையும் அவரது குடும்பத்தினரையும் இன்னும் எவ்வளவு காலத்துக்குத் துரத்தும் என்று தெரியவில்லை லதா ரஜினிகாந்த் மீது போலியான கடிதம் கொடுத்த வழக்கில் பெங்களூரு கோர்ட் ஒன்று சம்மன் அனுப்பியுள்ளது.

2014ல் வெளியான ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கியிருந்தார். படுதோல்வியை அடைந்த இப்படத்தால் ரஜினி அவரது மனைவி லதா மற்றும் மகள் மூவரும் பெரும் சங்கடங்களுக்கு ஆளானார்கள். விநியோகஸ்தர்கள் பலருக்கும் ரஜினி பதில் சொல்லவேண்டி வந்தது.

கர்நாடகத்தில் பிரபல தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று  இதை வாங்கி விளம்பரம் செய்தது. ஆனால், அங்கும் தமிழகத்தைப்போலவே படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.  இதனால், அதிருப்தியடைந்த வினியோகஸ்தர்கள் மற்றும் தனியார் விளம்பர நிறுவனம், நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டதாக கூறப்படுகிறது.அப்போது, ரஜினிகாந்த் குடும்பம் தரப்பில் அவரது மனைவி, நீதிமன்றம் மற்றும் தனியார் விளம்பர நிறுவனத்திற்கு கடிதம் மூலம் விளக்கம் அளித்தார். அதில் தங்களுக்கும் இந்த படத்தின் மூலம் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் நஷ்ட ஈடு கொடுக்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.

இதை ஏற்க மறுத்த தனியார் விளம்பர நிறுவனம், லதா கொடுத்த கடிதத்தை பரிசீலனை செய்தது. அதில் லதா வழங்கிய கடிதம் போலியானது என்று தெரியவந்தது. இதை விளம்பர நிறுவனம் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது. நீதிமன்றம் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி அல்சூர் கேட் போலீசில் லதாவிற்கு எதிராக மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ஒருமுறை லதா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அல்சூர் கேட் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், லதா தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில், 2வது முறையாக சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதில் விளம்பர நிறுவனம் கொடுத்த புகாருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டிருந்தது. 

இம்முறை சம்மனை ஏற்றுக்கொண்ட லதா அடுத்த வாரம் திங்கட்கிழமை மே 20ம் தேதி ஆஜராக சம்மதித்திருப்பதாகத் தகவல். 5 வது ஆண்டாகத் துரத்தும் ‘கோச்சடையான்’பூதம் ரஜினி குடும்பத்தை விட்டு  எப்போது வெளியேறும் என்பது தெரியவில்லை.