தமிழ் சினிமாவின் முக்கால்வாசி இயக்குநர்கள் தங்கள் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள நிலையில் ‘மாரி2’பட இயக்குநர் பாலாஜி மோகனும் சொந்த பேனர் துவங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். அடுத்த படத்துக்கு சரியான தயாரிப்பாளர் சிக்காத நிலையில் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, ‘வாயை மூடி பேசவும்’ என்று ஒரு படு தோல்விப்படம் கொடுத்தவர் சில வருட இடைவெளிக்குப்பின் தனுஷை வைத்து , ‘மாரி, படம் இயக்கினார். அப்படம் ஓரளவு சுமாராக ஓடியதை அடுத்து தனுஷே அவருக்கு மாரி 2’பட வாய்ப்பை வழங்கினார். அப்படமும் சுமாராகவே ஓடினாலும் படத்தின் ‘ரவுடி பேபி’பாடல் சென்சேஷனல் ஹிட்டாகி யூடுபில் பல ரெகார்டுகளை முறியடித்தது.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஓபன் விண்டோ’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருப்பதாகத் தெரிவித்துள்ள பாலாஜி மோகன்,இதன் மூலம் தயாரிக்கும் முதல் படத்தின் அறிவிப்பை நாளை வெளியிட இருப்பதாக கூறியிருக்கிறார். தயாரிப்பு நிறுவனம் துவங்கினாலும் கோ புரடியூசர் என்ற பெயரில் ஒருவரை உள்ளே இழுத்து வைத்துக்கொண்டு மொட்டை அடிப்பது சொந்த நிற்வனம் வைத்திருக்கும் டைரக்டர்களின் வழக்கம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.