தவறான உதாரணங்கள் கொண்ட படங்களை வரவேற்கிறோம் என்பது எனக்கு கொஞ்சம் வருத்தம் அளிப்பதாக இயக்குனர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

சரத்குமார், மேக்னா நாயுடு நடித்த வைத்தீஸ்வரன் படத்தை இயக்கியவர் ஆர்.கே.வித்யாதரன். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் ‘கடைசி காதல் கதை’. வர்மா படத்தில் நடித்த ஆகாஷ் பிரேம்குமார் இதில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ஷாலு ஷம்மு, சாம்ஸ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் கே.பாக்யராஜ், ”தினமும் சாமி கும்பிடும்போது பொதுவான வேண்டுதல் எதையாவது சாமியிடம் நான் கேட்பேன். கொரோனா காலத்தில், பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற வேண்டினேன். திரையரங்குகள் திறந்த பிறகு மக்கள் திரையரங்குகளுக்கு வரவேண்டும் என்று வேண்டினேன். இப்போது வரவேண்டாம் என்று வேண்டலாமா என்ற யோசனையில் இருக்கிறேன்.

ஏனென்றால், இப்போது வரும் சில படங்களை பார்த்த பின்பு திரையரங்குகளை திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது. நல்ல படங்களை நாம் வரவேற்கலாம். ஆனால் தவறான உதாரணங்கள் கொண்ட படங்களை வரவேற்கிறோம் என்பது எனக்கு கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. 

அவர்களும் மக்கள் இதைத்தான் ரசிக்கிறார்கள் என்று மக்கள் மீதே பழியை போட்டு அப்படிப்பட்ட தவறான படங்களை எடுக்கிறார்கள். இதற்காக பொதுநல வழக்கு போடும் அளவுக்கு மன உளைச்சலாக இருக்கிறது” என்றார். கே.பாக்யராஜின் இந்த பேச்சு கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.