காஷ்மீர் படுகொலை இஸ்லாமியர் தாக்குதல் இரண்டுமே வன்முறைதான் என நடிகை சாய் பல்லவி கூறியிருந்த நிலையில், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காஷ்மீர் படுகொலை இஸ்லாமியர் தாக்குதல் இரண்டுமே வன்முறைதான் என நடிகை சாய் பல்லவி கூறியிருந்த நிலையில், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது சாய்பல்லவி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேணு உடுகுலா இயக்கத்தில் நடிகர் ராணா டகுபதிக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ள படம் 'விரதா பருவம்' இத்திரைப்படம் ஜூன் 17-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் சாய்பல்லவி நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்கான பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இப்படம் தொடர்பாக தெலுங்கு செய்தி ஊடகமான தி கிரேட் ஆந்திரா என்ற நாளிதழுக்கு சாய்பல்லவி பேட்டி கொடுத்தார். அப்போது அவரிடம் நீங்கள் இடதுசாரி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,

நான் நடுநிலையான குடும்ப சூழ்நிலையில் வளர்க்கப்பட்டேன், நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கப்பட்டது, இடதுசாரி வலதுசாரி என்றெல்லாம் இல்லை நான் நடுநிலையானவள், காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பண்டிட்டுகள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என காட்டப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது, பசுவைக் கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என கருதி ஒரு கும்பல் படுகொலை செய்தது, அவரை கொன்றுவிட்டு ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டது, காஷ்மீரில் பல ஆண்டுக்கு முன்பு நடந்ததும், தற்போது நடக்கிற இந்த விஷயத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

என்னைப் பொறுத்த வரையில் இரண்டுமே வன்முறைதான், பெரிய எண்ணிக்கை கொண்ட மக்கள் சிறிய எண்ணிக்கை கொண்ட மக்களிடம் மோதுவது தவறு, சரி சமமாக உள்ளவர்களிடம் தான் போட்டி வேண்டும் என சாய்பல்லவி கூறினார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் சாய்பல்லவி மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
