கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் தீலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நடிகை  பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் திலீப் கடந்த 10–ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் மனுவை அங்கமாலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து கேரள ஒயர்நீதிமன்றத்தில் திலீப் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சுனில் தோமஸ் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. 

அப்போது திலீப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலும், நடிகர் திலீப்பும் சந்தித்து பேசியதற்கு ஆதாரம் இல்லை எனக்கூறினார். 

நடிகர் திலீப்பிடம் ஏற்கனவே போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு உள்ளது என்று கூறிய அவர், திலீப்பின் திரையுலக பயணத்தை சீர்குலைக்கவே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது எனக்கூறி அவருக்கு ஜாமீன் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். 

இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான, நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் இன்னும் கிடைக்காததாலும், தேவைப்பட்டால் திலீப்பிடம் மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டியிருக்கும் என்பதாலும் அவரை ஜாமீனில் விடக்கூடாது என அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில்  இன்று தீர்ப்பு வழங்கிய கேரள உயர் நீதிமன்றம் திலீப்புக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.