தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் யாரும் எதிர்பாராத திடீர் ட்விஸ்டாக இயக்குநர் பாக்யராஜ் இறங்கியிருப்பது கோடம்பாக்கதை சென்னை வெயிலைவிட மோசமாகத் தாக்கியுள்ளது. தேர்தலில் நிற்க ஆர்வமாக இல்லாத பாக்யராஜை அவரது குருநாசர் உசுப்பேற்றி நிற்கவைத்துள்ளதாகத் தெரிகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.2015 ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வென்ற நிர்வாகிகளின் பதவி காலம் 2018 செப்டம்பர் மாதம் முடிவடைந்தது.நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் முடியாததால் தேர்தலை ஆறு மாதத்திற்குத் தள்ளி வைத்தனர். தற்போது தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூன் 23 ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 10 ஆம் தேதி கடைசி நாள். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை 14 ஆம் தேதி திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியிடப்படும்.

இந்தத் தேர்தலில் நடிகர் விஷாலின் ‘பாண்டவர் அணி’ மீண்டும் போட்டியிடுகிறது. இந்த அணியின் சார்பில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். இதேபோல் கார்த்தி பொருளாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார்.ஏற்கனவே துணைத் தலைவராக இருந்த பொன்வண்ணன், இந்தத் தேர்தலில் நிற்கவில்லை. துணைத் தலைவர் பதவிகளுக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையில் புதிய அணி களம் இறங்குகிறது.

நடிகர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக பாக்யராஜ் அறிவித்து உள்ளார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு உதயா, குட்டி பத்மினி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.விஷால் அணியில் போட்டியிடுவதாக இருந்த சிலர் மெல்ல ஐசரி கணேஷ் அணிக்கு தாவிக்கொண்டிருக்கிறார்கள்.இதனால் நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாகி உள்ளது.

விஷால் அணிக்கு எதிராகப் போட்டியிட பாக்யராஜ் முன்வரக் காரணம் இயக்குநர் பாரதிராஜாதான் என்று கூறப்படுகிறது.தொடக்கத்தில் ஐசரிகணேஷ், பாக்யராஜை அணுகி நீங்கள் தலைவர் பதவிக்குப் போட்டியிடவேண்டும் என்று கேட்டபோது பாகயராஜ் மறுத்துவிட்டாராம். அதன்பின் இயக்குநர் பாரதிராஜாவிடம் இந்த விசயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.அவர்தான் பாக்யராஜை தொடர்புகொண்டு, விஷால் அணி நடிகர் சங்கத்தையும் தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் ஆக்கிரமித்து திரையுலகையே சீரழித்துவிட்டது. நாம் அதைத் தடுத்தாக வேண்டும் எனவே நடிகர் சங்கத் தலைவர் பொறுப்புக்கு நீ போட்டியிடவேண்டும். விஷாலைத் தோற்கடிக்கவேண்டும். அப்பதான் நீ எனக்கு சிஷ்யன் என்று உசுப்பேற்றியிருக்கிறாராம். அதன்பின்பே பாக்யராஜ்  தேர்ட்யலில் போட்டியிட ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.