AVM Saravanan Last rites : பிரபல ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், மூத்த சனிமா தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் உடல் வடபழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தமிழ் சினிமா துறையின் முக்கிய தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் நூற்றுக்கணக்கான வெற்றிப் படங்களை வழங்கி உள்ளது. இந்த நிறுவனம் ஏவி மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட நிலையில், இதனை ஏவிஎம் சரவணன் கவனித்து வந்தார். சம்சாரம் அது மின்சாரம், நானும் ஒரு பெண், சிவாஜி, வேட்டைக்காரன், அயன், மின்சார கனவு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இவர் தயாரித்துள்ளார்.

இதனிடையே வயது மூப்பு காரணமாக உடலில் சில பிரச்சினைகளுடன் சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 86. கடந்த இரு ஆண்டுகளாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த சரவணன் கடந்த மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய ஏவிஎம் நிறுவனத்தை தற்போது இவரது மகன் எம்எஸ் குகன் கவனித்து வருகிறார். ஏவிஎம் சரவணன் காலமானதைத் தொடர்ந்து அவரது உடல் வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரஜினிகாந்த், பாக்யராஜ், விக்ரம் பிரபு, சிவக்குமார், சூர்யா, இயக்குநர் ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில் தான் அவரது உடல் சென்னை வடபழனி மின் மயானத்தில் சற்று முன் தகனம் செய்யப்பட்டது.