ஆஸ்திரேலிய மாடல் அழகி அடவ் மார்ன்யங், விமான பயணத்தின் போது குடித்துவிட்டு ரகளை செய்ததற்காக மூன்று ஆண்டுகளுக்கு நன்னடத்தை சோதனை கண்காணிப்பு தண்டனை வழங்கப்பட்டு உள்ள சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. 

2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் போட்டியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் இவர். அதே வருடத்தில் ஒரு சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தனது முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோவும் பதிவிட்டு இருந்தார்.

தன்னுடைய பத்து வயதிலேயே... தென் சூடானில் இருந்தபோது போர் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் ஆஸ்திரேலியாவில் குடியேறினார். தற்போது 25 வயதான இவர் கடந்த பிப்ரவரி மாதம் மெல்போர்னிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்-க்கு விமானம் மூலம் சென்றார்.

அப்போது அதிக அளவில் குடித்து இருந்ததால் விமானத்திலிருந்த பணி பெண்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். பின்னர் ஆபாசமாகவும் பேசி ஆபாசமாகவும் நடந்து கொண்டுள்ளார். இதனையடுத்து குடிபோதையில் இருந்து மீள்வதற்காக ஆலோசனை எடுத்துக்கொள்ளவும்,100 மணி நேரம் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றும், மூன்று ஆண்டுகள் நன்னடத்தை சோதனை கண்காணிப்பும் விதித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாடல் அழகி தன்னுடைய செய்கைக்கு மிகவும் வருத்தம் தெரிவித்து உள்ளார்.