உலக நாடுகளை கடந்து, தற்போது இந்தியாவையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது கொரோனா என்னும் கொடிய வைரஸ். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஏற்கனவே போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது. 

வேலையிழந்து தொழிலாளர்கள்:

எதிர்பாராத வண்ணமாக திடீர் என அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவால்,  அணைத்து தொழிலாளர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தினமும் வேலை செய்தால் மட்டுமே சாப்பாடு என்கிற நிலையில் இருக்கும் கூலி தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாகி உள்ளது.

திரைப்பட தொழிலாளர்கள்:

இதே போல் திரைப்பட உலகை மட்டுமே நம்பி பிழைப்பை ஓட்டி வரும், பெப்சி தொழிலாளர்கள், நாடக மற்றும் சீரியல் நடிகர்கள் உட்பட மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இப்படி பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கும், நலிந்த கலைஞர்களுக்கும், பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

ராகவா லாரன்ஸ்:

அந்த வகையில், பிரபல நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், இது வரை தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் யாரும் கொடுக்க முன் வராத மிகப்பெரிய தொகையான 3 கோடியை அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, கை சிவக்க அள்ளி கொடுத்த அவருக்கு பிரபலங்கள் மட்டும் இன்றி, மக்களும், நெட்டிசன்களும் தங்களுடைய நன்றியை சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர்.

அட்லீ உதவி:

இதை தொடர்ந்து தற்போது ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என நான்கு வெற்றி படங்களை இயக்கி, முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அறியப்பட்ட, இயக்குனர் அட்லீ பெப்சி கலைஞர்களுக்கும், இயக்குனர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் கொடுத்துள்ள நிதி உதவி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில்... பெப்சி தொழிலாளர்களுக்கு 5 லட்சம் மற்றும் இயக்குனர் நல சங்கத்திற்கு 5 லட்சம் என மொத்தமாகவே 10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளாராம்.