சிலம்பரசனுக்கு ஏற்ற பெண்ணை அத்திவரதர் தான் காண்பிக்க வேண்டும் என அவருடைய தந்தையும் நடிகருமான டி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசய நிகழ்வான அத்தி வரதர் வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்தி வரதரை காண்பதற்காக தினந்தோறும் பல லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவிகின்றனர். அந்த வரிசையில் பெரும் அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் அடங்குவர்.

இந்நிலையில் அத்தி வரதரை தரிசனம் செய்வதற்காக காஞ்சிபுரம் சென்றிருந்த டி ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் டி ராஜேந்திரன். அதில் அத்தி பூத்தாற்போல என்று சொல்வார்கள்... அந்த அளவிற்கு அதிசயமான ஒரு நிகழ்வு இது தான். தற்போது அத்திவரதர் பூத்து உள்ளார். அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.. அதிர்ஷ்டம் கொடுக்க வேண்டும்... மக்கள் அத்தி வரதரை காண கஷ்டப்பட்டு போகவில்லை இஷ்டப்பட்டு போகிறார்கள்... வெளிநாட்டில் இருக்கும் என் மகன் சிலம்பரசன் எனக்கு போன் செய்து அத்திவரதர் பெருமாளை தரிசனம் செய்து விட்டீர்களா ? என கேட்டார்.

அவர் இங்கே இல்லை என்றாலும் அங்கிருந்தே கேட்கிறார். என்னுடைய வேண்டுதல் எல்லாம் சிலம்பரசனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும். நான் எந்த பெண்ணை வேண்டுமென்றாலும் முடிவு செய்யலாம்.. ஆனால் அப்பெண் சிலம்பரசனுக்கு பிடித்த பெண்ணாகவும் அவர் மனதிற்கு ஏற்ற பெண்ணாகவும் அமைய வேண்டும். எனக்கு அதுதான் முக்கியம். அப்படிப்பட்ட ஒரு பெண்ணை சிலம்பரசனுக்கு கிடைக்க அத்தி வரதர் தான் வழிகாட்டவேண்டும் என எமோஷனலாக பேசினார் டி ராஜேந்திரன்.